நியூஸ்பாண்ட்:

ர்.கே.நகர் தொகுதியில் நடிகர் விஷால் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில், தான் வெற்றிபெறாவிட்டாலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளரை விட அதிக வாக்கு பெறும் திட்டத்தோடு அவர் களம் இறங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஜெயலலிதா வெற்றி பெற்றிருந்த ஆர்.கே.நகர் தொகுதியில் அவரது மறைவை அடுத்து கடந்த ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதாக எழுந்த புகாரை அடுத்து தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் வரும் டிசம்பர் 21ம் தேதி தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.

அ.தி.மு.க. சார்பாக மதுசூதனன், தி.மு.க. வேட்பாளராக மருது கணேஷ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். டி.டி.வி. தினகரன் சுயேட்சையாக போட்டியிடுகிறார். பா.ஜ.க. சார்பில் கரு. நாகராஜன் போட்டியிடுகிறார்.

தி.மு.க.வுக்கு காங்கிரஸ், மார்க். கம்யூ உட்பட பல கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.

இந்த நிலையில், நடிகர் விஷால், சுயேட்சையாக போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவரது தரப்பில், “நடிகர் சங்கத் தேர்தல், தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் இரண்டிலும் அநாயசமாக வெற்றி பெற்றார் விஷால். ஆகவே ஆர்.கே. நகரிலும் நம்பிக்கையோடு களம் இறங்குகிறார்.

நடிக்க வருவதற்கு முன்பே விசயங்களில் மிகவும் ஆர்வமானவர் விசால். தவிர தன்னாலான உதவிகளை பிறருக்குச் செய்யத் தயங்காதவர். விவசாயிகள் தற்கொலைகள் நடந்தபோது தன்னாலான உதவிகளை முடிந்தவரை செய்தார். மழை வெள்ள காலத்திலும் அவர் முன்னின்று பல உதவிகளை செய்தார்.

அதோடு அநீதிகளை தட்டிக்கேட்பவர். “ஃபைனான்சியர் அன்பழகனுக்கு ஆதரவாக அமைச்சர்களே வந்தாலும் விடமாட்டோம்” என்று சமீபத்தில்கூட பகிரங்கமாக பேசியவர்.

சீமான் – விஷால்

அரசியலில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கமும் அவருக்கு உண்டு. அதற்கு ஆர்.கே. நகர் தேர்தல் ஆரம்பமாக இருக்கும்” என்கிறார்கள்.

அவர் போட்டியிட இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.

“ஆர்.கே. நகர்ல தொகுதியில் வெற்றி பெறமுடியாது என்பது விஷாலுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் கணிசமான ஓட்டு வாங்க வேண்டும் என்பதே அவரது எண்ணம். இதன் மூலம் தனது அரசியல் வாழ்க்கைக்கு நல்ல என்ட்ரி கிடைக்கும் என்று அவர் நினைக்கிறார்.

முக்கியமாக நாம் தமிழர் வேட்பாளரைவிட, அதிக ஓட்டுக்கள் வாங்கிக்காட்ட வேண்டும் என்பதே அவரது குறிக்கோள்” என்றும் பேசப்படுகிறது.

நாம் தமிழர் கட்சியுடன், விஷாலுக்கு என்ன பகை?

இது குறித்தும் விஷாலுக்கு நெருங்கிய வட்டாரத்தில் ஒரு தகவல் உலவுகிறது. அது…

“நடிகர் சங்கத்தில் பலவித குளறுபடிகள் நடந்துவந்தன. இதை எல்லாம் போக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான், தனக்கென அணி அமைத்து நடிகர் சங்க செயலாளர் பதவிக்கு போட்டியிட்டார் விஷால். அதில் வெற்றியும் பெற்றார்.

ஆனால் அந்த நேரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடுமையாக விஷாலா விமர்சித்தார்.

“நடிகர் சங்கத்தில் நீதி கேட்கும் விஷால், ஆந்திராவில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக நீதி கேட்பாரா” என்றார்.

ஒரு சில பேட்டிகளில் விஷால் தனது அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்தியபோது சீமான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

“விஷால் தமிழர் அல்லர். மாற்று மொழியினர் தமிழகத்தில் வாழலாம். ஆனால் ஆள நினைக்கக்கூடாது” என்று சீமானின் நாம் தமிழர் கட்சியினர் பேசினர்.

இரு மாதங்களுக்கு முன் நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது அது முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று ரஜினிகாந்தாக இருந்தாலும், விஷாலாக இருந்தாலும் கனவிலும் நினைக்கக் கூடாது” என்று வெளிப்படையாகவே பேசினார்.

இது போல தொடர்ந்து விஷாலை, “அவர் தமிழர் அல்ல. அவர் அரசியலுக்கு வர நினைக்கக் கூடாது” என்று சீமான் பேசி வருகிறார்.

இந்த நிலையில், திரைத்துறைய்ச் சேர்ந்த அசோக்குமார் கடந்த நவம்பர் மாதம் 21ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக, தனது தற்கொலைக்கு ஃபைனான்சியர் அன்புச் செழியன்தான்  காரணம் என்று கடிதம் எழுதி வைத்திருந்தார்.

இதையடுத்து அன்புச்செழியன் மீது வழக்கு பதிவு செய்தது காவல்துறை. அவர் தலைமறைவாகிவிடவே அவரை மூன்று தனிப்படை அமைத்து காவல்துறை தேடி வருகிறது.

கலைக்கோட்டுதயம்

இந்த நிலையில் ஃபைனான்சியர் அன்புச்செழியனை கடுமையாக விமர்சித்து அவரை கைது செய்ய வேண்டும் என்றும், “இல்லை அவர் நல்லவர்” என்றும் இரண்டு அணியாக பிரிந்து திரை நட்சத்திரங்கள் பேட்டி கொடுத்து வருகிறார்கள்.

சீமான், “அன்புச்செழியன் நல்லவர்” என்று பேசி வருகிறார்.

அதே நேரம் வேறு யாரும் அணுகாத கோணத்தில், “மற்ற மொழிக்கார்ரகள் பணம் கொடுத்து வாங்கினால் அது, ஃபைனான்ஸ். அதே நேரம் தமிழன் அன்புச்செழியன் பணம் கொடுத்து வாங்கினால் அது கந்துவட்டியா” என்று பேச ஆரம்பித்தார் சீமான்.

இதுவும் விஷாலை  வருத்தப்பட வைத்தது. “அன்புச்செழியனை காப்பாற்றுவதற்காக, தேவையில்லாமல் தமிழர்.. தமிழர் அல்லாதவர் என்று பேச ஆரம்பிக்கிறார் சீமான்” என்று விஷால் வருத்தப்பட்டார்.

ஆகவேதான் சீமானுக்கு தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட தயாராகிவிட்டார்.

சீமான் கட்சி வேட்பாளரைவிட அதிக ஓட்டு வாங்க வேண்டும் என்பதே அவரது விருப்பம்” என்கிறது விஷாலுக்கு நெருங்கிய வட்டாரம்.

சீமானின் நாம் தமிழர்கட்சி வேட்பாளராக ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடுபவர், “தமிழன் தொலைக்காட்சி அதிபர் கலைக்கோட்டுதயம்.

சரி, கடந்த 2016 பொதுத் தோர்தலில் ஆர்.கே. நகர் தொகுதி நிலவரம் என்ன?

அப்போது ஜெயலலிதா  உட்பட 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவரை எதிர்த்து பெண் வேட்பாளர்களையே முக்கிய கட்சிகள் நிறுத்தின.

தேவி

சிம்லா முத்துச்சோழன் (தி.மு.க.), வசந்திதேவி (வி.சி.- மக்கள் நலக்கூட்டணி), பி. ஆகினேஸ்  ஆகியோர் போட்டியிட்டனர். அதோடு ஜெயலட்சுமி, புவனேஸ்வரி, பிரவீன், செல்வராணி ஆகியோர் சுயேட்சையாக களம் இறங்கினர்.  தேவி என்கிற திருநங்கை நாம் தமிழர் கட்சி சார்பாக களம் இறக்கப்பட்டார். இதர வேட்பாளர்கள் ஆண்கள்.

தேர்தல் முடிவில், ஜெயலலிதா 97,218  வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அடுத்தடுத்த இடங்களை சிம்லா முத்துச்சோழன் (திமுக) 57,673  ,வசந்திதேவி (வி.சி.) 4195 , பி. ஆகினேஸ், (பா.ம,க) 3011, எம்.என். ராஜா (பாஜக) 2928 ஆகியோர் பிடித்தனர்.

அடுத்த இடத்தை நோட்டா  பெற்றது. மொத்தம் 2865 வாக்குகள். இதற்கு அடுத்தபடியாக நாம் தமிழர் வேட்பாளர்  தேவி 2513 வாக்குகளைப் பெற்றார். இதற்கு அடுத்த இடங்களை சுயேட்சைகள் பெற்றனர்.

இந்த நிலையில்தான், நாம் தமிழர் கட்சியைவிட அதிக வாக்கு பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்போடு விஷால் களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பார்ப்போம்.. யாருக்கு வெற்றி என்று.