சென்னை:
மியான்மரில் சிக்கித் தவித்த 13 தமிழர்கள் சென்னை வருகை தந்தனர்.

தகவல்தொழில்நுட்ப பணிகளுக்காக தாய்லாந்திற்கு சென்ற 50 தமிழர்கள் மியான்மரில் ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கித் தவித்தனர். தங்களை சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டினர். 50 தமிழர்கள் உள்பட 300 பேர் மியான்மரில் சிக்கித் தவித்தனர். மியான்மரில் சிக்கித் தவிக்கும் தங்களை மீட்க கோரி, அவர்கள் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது.

இந்நிலையில், மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து மியான்மரில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுத்தது.

இதன்பயனாக, மியான்மரில் சிக்கித் தவித்த 14 பேர், தாய்லாந்தில் இருந்து இன்று விமானம் மூலம் சென்னை திரும்புகின்றனர். இதில் 13 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

வெளியுறவுத்துறை மேற்கொண்ட முயற்சி காரணமாக முதற்கட்டமாக 13 பேர் இன்று தமிழகம் திரும்பினர்.