“என்னோட ஓட்டு உங்களுக்கு இல்லை’’: நேரடியாக ஸ்டாலினிடம் சொன்ன ஞாநி!

Must read

நெட்டிசன்:

மீபத்தில் மறைந்த பத்திரிகையாளர் ஞாநிக்கான படத்திறப்பு விழா சென்னை நிருபர்கள் சங்கத்தில்  நேற்று ( 24.1.18) மாலை நடந்தது . நிறையப் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஞாநியின் உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டனர்.

1955 ல் ஞாநி சங்கரனின் தந்தை வேம்புசாமியால் துவக்கப்பட்ட இந்தச் சங்கத்தில் ஒரு சமயத்தில் ஞாநியும் செயலாளராக இயங்கியிருக்கிற தகவலைச் சொன்னார் சென்னை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவரான ரங்கராஜ்.

பல கட்சித்தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசப்பட்டவற்றிலிருந்து சில பகுதிகள் :

காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவரான கோபண்ணா பேசும் போது ‘’ ஞாநி எழுதிய ‘’ ஓ பக்கங்கள்’’ பத்தியில் அவர் அரசியல் கட்சிகளை விமர்சித்தார். சமூக அவலத்தை விமர்சித்தார். அவருடைய பத்தி வார இதழ்களில் வரும்போது நாங்கள் ஆவலுடன் வாசிப்போம்.

அவருடன் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். சில கருத்துக்களில் என்னுடன் உடன்படுவார். பல கருத்துகளில் முரண்படுவார். அவருக்கான பார்வையை அவர் இறுதி வரை மாற்றிக் கொள்ளவே இல்லை’’ என்றார்.

பா.ம.க சட்டப்பிரிவுத் தலைவரான பாலு ‘’ ஞாநி எந்தக் கட்சியையும் விமர்சிக்கத் தவறவில்லை. பா.ம.க வையும் அவர் விமர்சித்திருக்கிறார். அவருடைய விமர்சனத்தில் இருந்தது சமூகத்துக்கான பார்வை. யாருக்கும் அஞ்சாத துணிச்சலான பார்வை. அவருடைய ‘’ ஓ.. பக்கங்களில்’’ இருந்த நேர்மைக்கும், துணிவுக்கும் வாரிசாக இங்குள்ள பத்திரிகையாளர்கள் யார் வாரிசாக வரப் போகிறீர்கள்?’’ – என்று முன்னிருந்த பத்திரிகையாளர்களைச் சுட்டிக்காட்டிக் கேட்டார் பாலு. ‘’ ஞாநியுடன் உடன்பட்டாலும், முரண்பட்டாலும் அவருடைய எழுத்து விளிம்புநிலை மக்களுக்கானதாகத் தானிருந்தது.

ஒடுக்குமுறைக்கும், அதிகாரச் செருக்கிற்கும் எதிரானதாகத் தானிருந்தது. இறுதிவரை அவருடைய தனித்த குரல் எந்தச் சார்புகளற்று ஒலித்துக் கொண்டிருந்தது. அந்தத் தோழருக்கு செவ்வணக்கத்தை விடுதலைச் சிறுத்தைகள் செலுத்துகிறது’’ என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் பேசினார்.

( 2014 ல் ஞாநிக்கு விடுதலைச் சிறுத்தைகள் – அயோத்தி தாசர் விருது கொடுத்தபோது கூட மிகுந்த தயக்கத்துக்குப் பிறகே வாங்கிக் கொள்ளச் சம்மதித்தார் என்றார் விடுலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான வன்னியரசு நேர்ப்பேச்சில்!)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழரான ஆர்.நல்லகண்ணு ’’ .ஞாநியின் எழுத்துகளில் சமரசம் செய்து கொண்டவர் அல்ல. அவருடைய பார்வையை அச்சமில்லாமல் பொதுவெளியில் முன் வைத்திருக்கிறார். அவர் மறைவதற்கு முன்னால் கூட வைரமுத்து- ஆண்டாள் பிரச்சினை தொடர்பாகத் தன்னுடைய கருத்தைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். இன்று வரை அது தொடர்பான கருத்துக்கள் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

விமர்சனத்திற்கு ஆளான கட்டுரையில் சொல்லப்பட்ட ‘’ தேவதாசி’’ என்கிற சொல்லை வைத்துக் கொண்டு சிலர் தூண்டிவிடுகிறார்கள். சவால் விடுகிறார்கள். தேவதாசி முறையைக் கோவிலை ஒட்டி வளர்த்துக் காப்பாற்றியது யார்? எந்த சமூகம் வளர்த்தது? தமிழகச் சட்டமன்றத்திலேயே சத்தியமூர்த்தி தேவதாசி முறைக்கு ஆதரவாகப் பேசியதை மறந்துவிட முடியுமா? இதையெல்லாம் தான் ஞாநி வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்’’ என்றார்.

நீதியரசரான சந்துரு ஞாநியுடன் இணைந்து மண்டல் கமிஷன் தொடர்பான சிறு வெளியீட்டை 25 ஆயிரம் பிரதிகள் வரை அச்சடித்துக் கல்லூரி, பள்ளி வாசல்களில் சென்று விநியோகித்த அனுபவங்களைச் சுருக்கமாகப் பகிர்ந்து கொண்டார்.

நிறைவாக ஞாநியின் படத்தைத் திறந்து வைத்துப் பேசிய தி.மு.க செயல் தலைவரான மு.க.ஸ்டாலின் ‘’ ஞாநி அரசியல் என்று வரும்போது பல கட்சிகளை விமர்சித்திருக்கிறார். குறிப்பாக தி.மு.க.வை அதிகமாகவே விமர்சித்திருக்கிறார். அதெல்லாம் பண்பட்ட, நாகரீகமான, எங்களை மறுபரிசீலனை செய்யத் தூண்டுகிற விமர்சனங்களாகத் தானிருந்தன. எதையும் வெளிபடையாகச் சொல்ல ஞாநி தயங்கியதே இல்லை. 1984 ஆம் ஆண்டு. தேர்தல் சமயம். நான் ஆயிரம் விளக்குத் தொகுதியின் தி.மு.க வேட்பாளர். ஞாநி அதே தொகுதியின் வாக்காளர்.

வாக்குக் கேட்டுப் போகிறபோது ஞாநி குடியிருந்த பீட்டர்ஸ் காலனிக்குப் போனேன். பல பத்திரிகையாளர்களைச் சந்தித்தேன். வாக்குக் கேட்டேன். ஞாநியையும் சந்தித்தேன். பேசிக் கொண்டிருந்தோம். காபியும் அளித்தார். இறுதியில் என்னிடம் சொன்னார். ‘’ என்னுடைய ஓட்டு உங்களுக்கு இல்லை’’ அடுத்து 1989 ஆம் ஆண்டு தேர்தல் சமயம். அவருடைய வீட்டுக்குப் போனேன். பேசினோம். அப்போது அரசியல் சூழ்நிலை மாறியிருந்தது. அன்று ஞாநி சொன்னார். ‘’ உங்களுக்குத் தான் ஓட்டுப் போடுவேன்’’ 84 ல் தோல்வியடைந்த நான் 89 ஆம் ஆண்டில் வெற்றிபெற்றேன். மண்டல் கமிஷன் அறிக்கை வெளிவந்த சமயம். வி.பி. சிங் தமிழகத்திற்கு அடிக்கடி வந்தார். அப்போது சிங்குடன் சென்று அவருடைய கூட்டங்களில் பேச்சை மொழிபெயர்த்தவர் ஞாநி தான்.

2014 ஆம் ஆண்டு. ஞாநியிடம் பேச வேண்டும் என்று தோன்றியது.  என்னுடைய வீட்டிற்கு வந்திருந்தார். இரண்டு மணி நேரம் வரை பேசிக் கொண்டிருந்தோம். என்னுடைய வளர்ச்சிக்கான பல விஷயங்களைப் பற்றி விரிவாகப் பேசிக் கொண்டிருந்தார் ஞாநி. அவருடைய மறைவு பெரிய இழப்பு’’ என்றார் ஸ்டாலின்.

விழா துவங்குவதற்கு முன்னால் ஞாநியின் மகன் மனுஷ் நந்தனைப் பேச அழைத்தார்கள். முன்னணி ஒளிப்பதிவாளராக இருக்கும் மனுஷ் பேசியது ஐந்து நிமிடங்கள் தானிருக்கும். அப்படியே ஞாநியின் குரலைக் கொஞ்சம் சுருதி குறைத்துக் கேட்பதைப் போலவே இருந்தது. காலம் சிலருடைய குரலை எப்படியெல்லாம் புதுப்பித்துத் தருகிறது!

-மணா

More articles

Latest article