கோவை: தமிழகத்துடனான எனது உறவு, ஒரு குடும்பத்தைப் போன்றது என்று பொதுமக்களிடையே பேசிய ராகுல்காந்தி நெகிழ்ச்சியுடன் கூறினார்.
3 நாள் தேர்தல் சுற்றுப்பயணமாக கோவை வந்துள்ள ராகுல்காந்திக்கு கோவை காங்கிரஸ் கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 3 நாட்கள் கோவை பகுதியில் தேர்தல் பிரசாரத்திற்கு முகாமிடும் ராகுல், சுமார் 200 கி.மீ தூரம் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்திக்கிறார்.
கோவை வந்தடைந்த ராகுல் காந்தி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியுடன் வாகனப் பேரணி நடத்தி வருகிறார். ராகுலுக்கு ஆயிரக்கணக்கான காங்கிரஸ் கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் சாலையின் இருமங்கிலும் நின்றுகொண்டு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
அப்போது பொதுமக்களிடையேபேசிய ராகுல், தமிழகத்தற்கு வருவது தனக்கு மகிழ்ச்சியானது என்று கூறியவர், தமிழகத்துடனான எனது உறவு, ஒரு குடும்பத்தைப் போன்றது என்று நெகிழ்ச்சியுடன் கூறியதுடன், இது அரசியல் ஆதாயத்திற்கானது அல்ல, எனது மனதில் தோன்றும் ரத்தப்பிணைப்புடன் இணைந்த ஓர் உணர்வு என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
தமிழ் மக்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருப்பதாகவும், ஆனால், மோடி அரசு, தமிழ் மக்களையும், தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் புறக்கணிக்கிறது. அனைத்து துறைகளிலும் பெற்ற பெருமைகளை தமிழகம் தற்போது இழந்து வருகிறது; தற்போது தமிழக மக்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறது, விவசாயிகள் முகமோ வாடிய நிலையிலேயே காணப்படுகிறது என்றவர், ஏழை மக்கள் மீது மோடி அரசுக்கு அக்கறை இல்லை, பிரதமர் மோடி, பெரிய வணிகர்களின் நலனுக்காகவே செயல்பட்டு வருகிறார், அவர்களுக்கு பணத்தை வாரி வழங்குகிறார், அவர்களுடனான நட்பை பேணவே விரும்புகிறார் என குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது, புதிய அரசாங்கம் அமைய இருக்கிறது. நாங்கள் உங்களுக்காக பணியாற்ற விரும்புகிறோம் என்றவர், இந்தியாயில் பல மொழிகள், கலாச்சாரங்கள் உள்ளது என்பதை நாங்கள் நம்புகிறோம், தமிழ், இந்தி மற்றும் பெங்காலி உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் நாங்கள் மதிக்கிறோம் ஆனால், மத்தியஅரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது, அனைத்து மொழிகளையும் சமமாக கருத வேண்டும் என்றார்.
வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளை மோடி அரசு வஞ்சித்து வருகிறது என்றும் குற்றம் சாட்டியவர், இந்தியாவில் தற்போது மக்களுக்கு என்ன இருக்கிறது என்று வினா எழுப்பியதுடன், அனைத்தையும் மோடி எடுத்துக்கொள்கிறார், அதைத் தடுக்கவே நாங்கள் விவசாயிகளுடன் நிற்கிறோம் என்றார்.
தமிழகத்துடனான எனது உறவு, நம்பிக்கை மற்றும் நேர்மையுடன் எப்போதுமே ஒரு குடும்பத்தைப் போலவே இருக்கிறது, எந்தவொரு சுய ஆர்வத்திற்கும் நான் இங்கு வரவில்லை எறு கூறியவர், அவர்களின் (மோடி அரசின்) வேறுபாட்டைப் புரிந்துகொள்ளவே, சிறுகுறு தொழிலாளர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை சந்தித்து பேசுகிறேன்.
இவ்வாறு ராகுல் பேசினார்.