“துக்ளக்” இதழுக்கு முன்னோடி, எனது “கிண்டல்” இதழ்தான்! :  தமிழகத்தின் முதல் புலனாய்வு இதழாளர் ‘விசிட்டர்’ அனந்து சிறப்புப் பேட்டி

Must read

ம்பீரமான குரல், எதையும் வேகமாக உள்வாங்கி எதிர்வினையாற்றும் தன்மை, நேர்படப்பேசுதல், நல்ல ஆஜானுபாகுவான தோற்றம் இவை தாம் விசிட்டர் அனந்துவின் அடையாளங்கள்.

தமிழ்நாட்டில் பருவ இதழ்கள் என்றால் கதை, தொடர்கதை, துணுக்குகள், சினிமாச்செய்திகள்…. இத்யாதி என்பதாக மட்டுமே அறியபட்டிருந்த சூழலில் அரசியல் விமர்சனத்திற்கு என்றும், மக்கள் பிரச்சினைகளை புலனாய்வு செய்து வெளிப்படுத்துவதற்காகவென்றும் ஒரு முன்னோடி முயற்சியை மேற்கொண்டு 1969களின் இறுதியில் ‘கிண்டல்’ என்ற இதழைக் கொண்டு வந்தவர் தான் விசிட்டர் அனந்து.

சென்னை கொட்டிவாக்கம் பத்திரிகையாளர் குடியிருப்பில் அவருடனான ஒரு உரையாடலில் நான் உள்வாங்கியவற்றை  இங்கே தொகுத்தளிக்கிறேன்.

“நான் சிறுவனாக இருந்த காலம் என்பது தமிழகத்தில் தேசிய இயக்கத்தின் தாக்கம், திராவிட இயக்க எழுச்சி,  இடதுசாரி கட்சிகளின் தத்துவார்த்த பாதிப்பு போன்றவை உச்சத்தில் இருந்த காலகட்டமாகும். எனவே சிறுவயதிலிருந்தே இவற்றை உள்வாங்கியே நான் வளர்ந்தேன்.

“விசிட்டர்” அனந்து

என் அப்பா டி.எஸ்.லஷ்மிபதி தேசியவங்கியில் கணக்காளராக இருந்தார். அன்றைய பத்திரிகைகள் பெரும்பாலானவற்றை அப்பா வீட்டிற்கு வாங்கி வருவார். நாங்கள் 9 பிள்ளைகள்.  அனைவரும் போட்டிப்போட்டுக்கொண்டு பத்திரிகைகள் வாசிப்போம்.

எழுத்துகளை தொடர்ந்து வாசிக்கவும், வாசித்தவை குறித்து யோசிக்கவும் தளைப்பட்டபோது எனக்குள் இயல்பாகவே பத்திரிகையானுக்குரிய விதை விழுந்துவிட்டது. என்னுடைய 17 வது வயதில் ‘மத்தாப்பு’ என்ற பெயரில் ஒரு கையெழுத்து பத்திரிகையை கொண்டுவந்தேன். அதில் மகிழ்ச்சி கண்ணன் என்ற பெயரில் எழுதினேன். அதில் குழந்தைகளுக்கான கவிதைகள் நிறைய எழுதினேன். அது தனி புத்தகமாக வந்தது.

பச்சையப்பன் கல்லூரியில் படித்த காலத்தில் சொல்லருவி என்றொரு இதழை மாணவர்கள் சேர்ந்து கொண்டுவந்தோம்.

பச்சையப்பன் கல்லூரி என்பது அந்த காலகட்டத்தில் திராவிட இயக்க தாக்கமுள்ள மாணவர்களின் பாசறையாக இருந்தது. தமிழ்குடிமகன், துரைமுருகன் போன்றோர் என்னோடு படித்தவர்கள். அப்போது அரசியல் குறித்த பேச்சுகள், விவாதங்கள் எங்களிடம் தூக்கலாக வெளிப்படும்.

“துக்ளக்” முதல் இதழ் அட்டைப்டம்

அப்போது ‘சங்கர்ஸ்வீக்லி’ என்ற ஒரு ஆங்கில அரசியல் வார இதழ் வந்து கொண்டிருந்தது. அது என்னை, ஏன் தமிழக அரசியல் குறித்தும் இது போன்ற ஒரு இதழ் கொண்டு வரக்கூடாது என்ற எண்ணத்தை உருவாக்கியது.

அரசியல் நையாண்டி, கேலிசித்திரம், புலான்ய்வு கட்டுரைகள், அரசியல் விமர்சனங்கள், அரசியல்வாதிகளின் பேட்டிகள்… இப்படியாக ஒரு தமிழ்பத்திகைகை என் மனதில் ‘கரு’ கொண்டது. என் எண்ணங்களை கார்டூனாக்க சக்தி என்ற கார்டூனிஸ்ட் கிடைத்தார்.

1969களின் இறுதியில் ‘கிண்டல்’ என்றொரு அரசியல் மாதம் இருமுறை இதழ் தோன்றியது.

தமிழ்ச்சூழலுக்கு புதிது என்ற போதிலும் அதற்கு கிடைத்த வரவேற்பு ‘இது காலத்தின் தேவை’ என்பதை உணர்த்தியது. ஆகவே முழு தீவிரத் தன்மையோடு நான் இயங்கினேன். பத்திரிகையின் விற்பனை பத்தாயிரம் பிரதிகள் என்ற நிலையை தொட்டபோது பெரும் பரவசம் ஏற்பட்டது. ஏனெனில் எந்தப் பணபலமோ, பின்புலமோ, சந்தை அனுபவமோ இல்லாமல் ஒரு புது முயற்சிக்கு கிடைத்த வரவேற்பு அது.

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை பேட்டிகாணும் அனந்து

இந்தச்சூழலில் தான் ஆனந்தவிகடன் குழுமத்திலிருந்து ‘சோ’ அவர்களை ஆசிரியராகக் கொண்டு ‘துக்ளக்’ என்ற இதழ் வெளியாகிறது. அது நான் நடத்திய ‘கிண்டல்’ பத்திரிகையின் ‘கான்செப்ட்டை’ அப்படியே பிரதிபலிப்பதாக இருந்தது. இதையடுத்து என் பத்திரிகைக்கான வரவேற்பு திடீரென சரிந்தது.

பிரபல குழுமத்திலிருந்து பிரபல நபரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த துக்ளக்கின் வருகை கிண்டல், “கிண்டல்” இதழின் மறைவுக்கு காரணமானது. இதை கடைசி இதழில் இவ்வாறு நான் பதிவு செய்தேன். “கிண்டல்” இதழின் தாக்கம் அதைப்போன்ற ஒரு இதழ் பிரபல பத்திரிகை குழுமத்திலிருந்து வெளிவரச் செய்துள்ளது. இந்த பத்திரிகை நிறுத்தப்படுவது தோல்வி போன்ற தோற்றம் ஏற்படுத்தினாலும் அது தன்னைப்போன்ற ஒரு இதழ் தோன்ற காரணமாயிருந்தது என்ற வகையில் வெற்றியே” என எழுதினேன்.

அதன் பிறகு இன்னொரு பிரபல இதழின் நிர்வாகத்தினரிடம் இணைந்து “கிண்டல்” இதழை நடத்த திட்டமிட்டு அணுகினேன்.

அந்த நிர்வாகத்தினர்…

அடுத்த பகுதி லிங்க் கீழே:

 

 https://patrikai.com/thughlak-experiences-visitor-ananthu-interview/

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article