சென்னை: அரசியல் என்ற அறிவிப்புக்கு நோ சொல்லி உள்ள நடிகர் ரஜினிகாந்தை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி டிவிட் பதிவிட்டு உள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,  நடிகர் ரஜினிகாந்த் தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு எடுக்கும் முடிவை என்னிடம் தெரிவித்தார். ஆனாலும், அவர் நேரடி அரசியலில் இல்லாவிட்டாலும் 1996-ம் ஆண்டைப் போல் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்துவார் என நம்புவதாக குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ரஜினி அரசியலுக்கு வருவதில் மிகவும் அக்கறை கொண்டவர்களில் ஒருவர் குருமூர்த்தி. அவ்வப்போது ரஜினியை சந்தித்து பேசுவதும், அவரை பாஜகவுக்கும் இழுக்கும் செயலில் ஈடுபட்டு வந்ததும் இவர்தான். ரஜினி கட்சி தொடங்குவேன் என அறிவித்தபோதும், அதற்கு வரவேற்பு தெரிவித்தார். சமீபத்தில் அமித்ஷா சென்னை வந்தபோது, அவரிடம் ரஜினி குறித்து பேசியதாகவும் தகவல் வெளியானது.

அரசியலுக்கு வரவில்லை என ரஜினிகாந்த் அறிவிப்பு…

இந்த நிலையில், திடீரென அரசியல் கட்சி தொடங்கும் முடிவிலிருந்து பல்டியடித்து விட்டார்.  அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்று அதிகாரபூர்வமாக ரஜினி அறிவித்து, அவரது ரசிகர்களை ஏமாற்றி உள்ளார். இதற்காக ரஜினி, தமிழக மக்களின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், உடனே அவரை கர்நாடகத்துக்கு வண்டியேற்றி அனுப்ப வேண்டும் என்றும்  சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் காரசாரமாக பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குருமூர்த்தி,  ரஜினி நேரடி அரசியலில் இல்லாவிட்டாலும் 1996-ம் ஆண்டைப் போல் வாய்ஸ் கொடுப்பார் என்று எண்ணுவதாக குருமூர்த்தி பதிவிட்டுள்ளார். இதுவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு உள்ளது. ரஜினிக்கு வக்காலத்து வாங்கும் இவர்களை போன்ற அரசியல் புரோக்கர்களையும்  தமிழகத்தில் இருந்தே துரத்தியடிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.

போலி ஆன்மிகவாதி: அரசியல் என்ற பெயரில் ரசிகர்களுக்கு ஆசை காட்டி ‘அல்வா’ கொடுத்த ரஜினிகாந்த்….