கிருஷ்ணகிரி
பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது என கம்யூனிஸ்ட் கட்சி செயலர் முத்தரசன் கூறி உள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியில் பல்வேறு அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் இணையும் நிகழ்வு நடந்தது. இந்நிகழ்வில் பொதுச் செயலர் முத்தரசன், மாநில குழு உறுப்பினர்கள் லகுமையா, சிவராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வின் முடிவில் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது முத்தரசன் செய்தியாளர்களிடம், “உத்தரp பிரதேச மாநிலத்தில் நடந்த வன்முறைச் சம்பவத்திற்கு கம்யூனிஸ்ட் உள்ளிட்டஅனைத்துக் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரதமர் மட்டும் கண்டிக்காமல் இருப்பது, இதனை ஆதரித்து, ஊக்குவிப்பதைப் போல உள்ளது.
பாஜகவால் நிறைவேற்றப்பட்ட புதிய வேளாண்மை திருத்தச் சட்டங்கள், மின் திருத்தச் சட்டங்கள் ஆகியவற்றைத் திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்காலத்தில் போராட்டங்கள் தீவிரமடையும். பண்டிகைகள் நெருங்கும் நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நியாய விலைக் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க உறுதி செய்ய வேண்டும்.
வீட்டு உபயோக எரிவாயு விலையைக் குறைக்க வேண்டும். மற்றும் ஜிஎஸ்டி முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஒரு சிலர் பாஜக தமிழகத்தில் வளர்ந்துவிட்டதாக ஒருவித மாய தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால் பாஜகவால் தமிழகத்தில் ஒரு போதும் காலூன்ற முடியாது.” எனத் தெரிவித்துள்ளார்.