கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவின் போது துர்கா தெய்வ சிலைக்கு விதவிதமான அலங்காரம் செய்யப்படும். இந்த அலங்காரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் துர்கா தெய்வத்தின் கூந்தல் தயாரிக்கும் பணி ஹவுரா மாவட்த்தில் மும்முரமாக நடந்து வருகிறது.

வழக்கம் போல் இந்த பணியில் ஹவுரா மாவட்டத்தில் முஸ்லிம் அதிகம் வசிக்கும் பகுதியை சேர்ந்த 50 முதல் 60 வரையிலான முஸ்லிம் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். ஹவுராவில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள டோம்ஜூர் காவல்நிலைய எல்லையில் இந்த பர்பதிப்பூர் கிராமம் உள்ளது.

இந்த முஸ்லிம் குடும்பத்தினர் நீண்ட காலமாக துர்கா கூந்தல் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீண்ட காலமாக இந்த பணி நடந்து வந்தாலும் இந்து தெய்வ சிலைக்கு முஸ்லிம்கள் கூந்தல் தயாரிக்கும் தகவல் சமீபத்தில் தான் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. இந்த தயாரிப்பு பணியை 3 நபர்கள் சமீபத்தில் வீடியோவில் பதிவு செய்து யு டியூபில் ‘கூந்தல்தறி’ என்ற ஆவணப்படமாக வெளியிட்டனர்.

‘‘கூந்தலை சனலில் இருந்து பிரித்து எடுத்து மனிதர்களின் கூந்தலை போல் காட்சி அளிப்பதற்காக கறுப்பு வர்ணம் பூசுகின்றனர். இதன் பின்னர் அது அசல் மனித கூந்தலாகவே மாறிவிடுகிறது.

பின்னர் இது களிமண் மாதிரியில் பொருத்துவதற்காக குமரத்துளி, அனிசூர் ரஹ்மான் போன்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்’’ என்று அங்கு பணியாற்றும் மூத்த தொழிலாளர்கள் தெரிவித்தனர். இங்கு தயாரி க்கப்படும் கூந்தல்கள் 30 ஆயிரம் துர்கா சிலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள சாகில் என்ற இளைஞர் கூறுகையில்,‘‘ நாங்கள் முஸ்லிம்கள் தான். ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருப்பவர்கள் தான். ஆனால் துர்கா மற்றும் காளி சிலைகளுக்கு கூந்தல் தயாரிக்கும் போது எங்களது மதம் குறுக்கே வராது’’ என்றார்.