தமிழக இளைஞர்கள், உலகத்துக்கே வழிகாட்டியாக மாறிவிட்டார்கள்! இளையராஜா புகழாரம்

Must read

சென்னை,

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தன்னெழுச்சியாக போராடி வரும் இளைஞர்கள் உலகத்துக்கு வழிகாட்டியாக மாறிவிட்டார்கள் என்று பிரபல இசையமைப்பாளர் இளையராஜா புகழ்ந்துள்ளார். தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் இளைஞர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டு தனது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

சென்னை மெரினா கடற்கரையில் இன்று 5வது நாளாக லட்சக்கணக்கான இளைஞர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். காந்தி பிறந்த நாட்டில், அகிம்சை வழியில் தமிழர்கள் நடத்தி வரும இந்த போராட்டம் உலக மக்களையே வியப்படை வைத்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களுக்கு இசைஞானி இளையராஜா புகழாரம் சூட்டி வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது,

“மாணவர்களே, இளைஞர்களே.. இந்த உலகத்துக்கே வழிகாட்டும் முறையாக இப்போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். இவ்வளவு அமைதியான, ஒரு தலைவன் இல்லாமல், ஒரு கட்சியினுடைய துணையில்லாமல், வேறு எந்த ஒரு இயக்கத்தின் ஆதரவுமில்லாமல், ஆதரவையும் நாடாமல் யாரும் வரக் கூடாது என தடை செய்துவிட்டு நீங்களாக நடத்துவது உங்களுக்குள் இருக்கும் தன்னம்பிக்கையை காட்டுகிறது. இந்தத் தன்னம்பிக்கையை, அமைதியான போராட்ட வழியை இந்த உலகம் கண்டிப்பாக பின்பற்றப் போகிறது. உலகத்துக்கே வழிகாட்டியாக மாறிவிட்டீர்கள். அவ்வளவு உத்வேகமும், உணர்ச்சியும், உள்ளுணர்வும் உங்களுக்குள் இத்தனை நாள் வரை அடங்கிக் கிடந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

இப்பொழுது வெளியே வந்திருக்கிறது. இது தொடரட்டும். இடையிலே புகுந்து சில அரசியல் கட்சிகள், சில தலைவர்கள், சில அமைப்புகள் இதில் மீட்டர் போட பார்த்தார்கள். அதெல்லாம் பலிக்கவில்லை. பொதுமக்கள் நன்றாக புரிந்து கொண்டார்கள். உங்களுடைய ஒற்றுமை, உணர்விலே ஒன்றியிருப்பதை கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். உங்களுக்கு வெற்றி நிச்சயமாக கிட்டும். இடையில் யார் புகுந்தும், நாங்கள் தான் வாங்கிக் கொடுத்தோம் என்று சொல்வதற்கு வழியே கிடையாது. உங்களுடைய ஒற்றுமையையும், உத்வேகத்தையும் மட்டுப்படுத்துகின்ற வகையிலே சிலர் நாளை வந்துவிடும் சட்டம் என்று கூறி கலைந்து போய்விடுவீர்கள் என்று சொல்வார்கள்.

அதெல்லாம் நீங்கள் செவிசாய்க்க வேண்டாம். உங்கள் உத்வேகத்துடனும், உணர்வுடனும் ஒன்றிப் போய் ஒன்றாக நிற்பது என்று தொடரட்டும். அந்த தீர்ப்பு வரும்வரை தொடரட்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். பெரிய சாதனை செய்துள்ளீர்கள் என்று நான் நினைத்து மகிழ்கிறேன்” இவ்வாறு கூறியுள்ளார்.

More articles

Latest article