பிரபல கர்நாடக இசை பாடகர் டி.எம் கிருஷ்ணாவிற்கு இந்த வருடத்திற்கான சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இசை உலகில் மிகப் பெரிய கவுரவமாக கருதப்படும் மியூசிக் அகாடமியின் ‘சங்கீத கலாநிதி’ உள்ளிட்ட விருதுகளுக்கு இந்த ஆண்டு பல்வேறு கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

எம்.எஸ் சுப்புலட்சுமி தொடங்கி மதுரை மணி ஐயர், டிகே பட்டம்மாள், பால சரஸ்வதி, பாலமுரளி கிருஷ்ணா என கர்நாடக இசை உலகின் ஜாம்பவான்கள் பலரும் பெற்றுள்ள விருதுதான் மியூசிக் அகாடமி சார்பில் வழங்கப்படும் சங்கீத கலாநிதி விருது.

இந்த சங்கீத கலாநிதி விருது, கர்நாடக இசை பாடகர்களால் ஆஸ்காருக்கு சமமாக கருதப்படுகிறது.

கர்நாடக இசை பாடகர் டி.எம் கிருஷ்ணா

பாரம்பரிய கர்நாடக இசை மட்டுமின்றி கர்நாடக இசையின் தனித்துவத்தை மக்கள் மொழியில் பாடுவதில் வல்லவரான டி எம் கிருஷ்ணா-வுக்கு இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக இசை ஆன்மீகத்திற்கும் ஒரு சில ஆராதனைகளுக்கும் இசைக்கப்படும் இசையாக இருக்கும் நிலையில் டிஎம் கிருஷ்ணா முதல்முறையாக கர்நாடக இசையை கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கான இசையாகவும் மாற்றினார்.

உதாரணத்துக்கு சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் இஸ்லாமிய பாடலாக கர்நாடக இசை ராகத்தை பயன்படுத்தி சி ஏ ஏ சட்டத்திற்கு எதிராக பாடினார்.

இந்த நிலையில், பிரபல கர்நாடக இசை சகோதரிகளான காயத்ரி ரஞ்சனி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவறான ஒரு நபருக்கு கர்நாடக இசைக்கான உயரிய விருதான சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் 2024 ஆம் ஆண்டுக்கான மியூசிக் அகாடமியின் மாநாட்டில் கலந்துகொள்வதில் இருந்தும், டிசம்பர் 25 அன்று நடத்துவதாக இருந்த கச்சேரியில் இருந்தும் விலகுவதாக தெரிவித்துள்ளனர்.

“பெரியார் போன்ற தலைவரை புகழ்ந்து பாடிய டி.எம் கிருஷ்ணாவிற்கு விருது வழங்கிய இடத்தில் நாங்கள் பாட விரும்பவில்லை” என ரஞ்சனி காயத்ரி சகோதரிகள் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மியூசிக் அகாடமி தலைவர் இசைக்கலைஞருக்கு விருது வழங்குவது குறித்த ஆட்சேபனை கடிதத்தை எங்களுக்கு அனுப்பிய ரஞ்சனி, காயத்ரி சகோதரிகள் எங்கள் பதில் கடிதத்திற்காக காத்திருக்காமல் அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருப்பது உள்நோக்கம் கொண்டதாக உள்ளது.

 

கர்நாடக சங்கீத உலகில் ரஞ்சனி, காயத்ரி ஆகியோரின் பங்கு சிறந்தது என்ற போதும் ஒரு மூத்த இசைக்கலைஞரை தரக்குறைவாக விமர்சித்திருப்பது இசை உலகைச் சேர்ந்த யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் மியூசிக் அகாடமி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்று ரஞ்சனி, காயத்ரி சகோதரிகள் அறிவித்திருப்பது அவர்களின் சொந்த முடிவு என்றும் அதில் தாங்கள் தலையிடவிரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.