மும்பை

வாட்ஸ்அப் குழுக்களில் உள்ள உறுப்பினர்கள் பதியும் செய்திகளுக்கு அந்த குழுவின் நிர்வாகி பொறுப்பு இல்லை என மும்பை உயர்நீதிமன்ற புனே கிளை தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் குழுக்களில் எந்த ஒரு தவறான தகவல் அல்லது ஆட்சேபத்துக்குறிய  பதிவுகளைக் குழுக்களின் உறுப்பினர் பதிந்தால் அதற்கு அந்தக் குழுவின் அட்மின் அதாவது நிர்வாகியே பொறுப்பு என பொதுவாக கூறப்படுகிறது.  இதையொட்டி  பல குழுக்களில் தேர்தல் நேரங்களில் நிர்வாகிகளை தவிர வேறு யாரும் பதிவுகளை இட முடியாதபடி செட்டிங்குகள் மாற்றி அமைப்பது நடைபெறுகிறது.

புனேவில் உள்ள 33 வயதான இளைஞரான கிஷோர் தரோன் என்பவர் ஒரு வாட்ஸ்அப் குழுவின் நிர்வாகியாக உள்ளார்.  அந்தக குழுவில் உள்ள ஒரு உறுப்பினர் அதே குழுவில் உள்ள ஒரு பெண் குறித்து தவறான மற்றும் ஆட்சேபத்துக்குரிய வார்த்தைகளில் பதிவு இட்டதாகச் சொல்லப்படுகிறது. 

இதற்கு கிஷோர் தரோன் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.  மேலும் அந்த உறுப்பினரைக் குழுவை விட்டு நீக்கவில்லை.   இதையொட்டி கோண்டியா மாவட்ட நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குப் பதியப்பட்டது.  இந்த வழக்கை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கிஷோர் தரோன் மும்பை உயர்நீதிமன்ற புனே கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்., “வாட்ஸ்அப் குழுவில் நிர்வாகியாக உள்ளவர் ஒரு உறுப்பினரைக் கண்டிக்க முடியாது.  அவர் இந்த குழுவை ஆரம்பித்து உறுப்பினர் சேர்க்கை மற்றும் நீக்கலைச் செய்பவர் ஆவார்.  பல வாட்ஸ்அப் குழுவில் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்களை நியமிப்பது உண்டு.  எனவே நிர்வாகிகளுக்கு இது குறித்து முழு அதிகாரம் கிடையாது.

அவர்களால் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் நீக்குதலைச் செய்ய முடியும் என்றாலும் அவரை மீண்டும் மற்ற நிர்வாகிகள் நீக்க அல்லது சேர்க்க முடியும்.  மேலும்  ஒரு வாட்ஸ்அப் குழு நிர்வாகிக்கு அந்த குழுவில் பதியப்படுவதை  அது பதியும் முன்பே தடுக்கவோ மாற்றவோ அல்லது அது குறித்து எச்சரிக்கவோ எவ்வித அதிகாரமும் இல்லை” எனத் தெரிவித்து கிஷோர் தரோன் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது.