தாக்கரே அரசை வறுத்தெடுத்த உயர்நீதிமன்றம்..

மகாராஷ்டிர மாநிலத்தில் உத்தவ்தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசாங்கம் பதவியில் உள்ளது.

ஊரடங்கு விதிகளில் தளர்வுகளை அறிவித்த தாக்கரே அரசு, இந்தி சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தது.

ஆனால் ‘’ 65 வயது நிரம்பியோர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளக்கூடாது’’ என நிபந்தனை விதித்தது.

இதனை எதிர்த்து பிரமோத் பாண்டே என்பவர் பம்பாய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 70 வயதான பாண்டே, சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார்.

நீதிபதிகள் ஷாரூக், ரியாஸ் ஆகியோர் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது

சினிமா படப்பிடிப்புக்கு வயது வரம்பு நிர்ணயித்துள்ள, மகாராஷ்டிர அரசை நீதிபதிகள் வறுத்தெடுத்து விட்டனர்.

தாக்கரே அரசுக்கு கீழ்க்கண்ட வினாக்களை , நீதிபதிகள் எழுப்பியுள்ளனர்:.

+ 65 வயதுக்கு மேற்பட்ட நடிகர்களும்  தொழில்நுட்ப கலைஞர்களும் சினிமா மற்றும் டி.வி. படப்பிடிப்பில் பங்கேற்கக் கூடாது என எந்த அளவுகோலை வைத்துத் தீர்மானித்தீர்கள்?

+ கொரோனா பரவல் காரணமாக அலுவலகங்கள் 30 % ஊழியர்களுடன் இயங்கலாம் என அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஊழியர்களுக்கு வயது வரம்பு ஏதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா?

+ பஸ், ரயில் மற்றும் விமானங்களில் இப்போது பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பயணிகளுக்கு வயது வரம்பு ஏதும் உள்ளதா?

+ வேலை உரிமை பறிக்கப்பட்ட இந்த வயதினருக்கு நீங்கள் சாப்பாடு போடப்போகிறீர்களா?

இவ்வாறு சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளது , நீதிமன்றம்.

-பா.பாரதி.