அடல் சேது மேம்பாலத்தில் முதல்முறையாக மாருதி கார் ஒன்று அதிவேகமாக சென்று தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மும்பை முதல் நவி மும்பை வரை கடல் மேல் அமைக்கப்பட்ட இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம் கடந்த ஜனவரி 12ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைக்கப்பட்டது.

ரூ. 18000 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ‘அடல் சேது’ என்று அழைக்கப்படும் இந்த பாலம் 6 வழிப்பாதையுடன் 21.8 கி.மீ. நீளம் கொண்டது.

மும்பையில் இருந்து புனே, கோவா மற்றும் தென் இந்திய மாநிலங்களை இணைக்கும் இந்த மேம்பாலம் வழியாக மும்பையில் இருந்து நவி மும்பைக்கு 20 நிமிடங்களில் செல்ல முடியும். இதற்கு முன் 2 மணி நேரம் ஆன நிலையில் தற்போது இந்த மேம்பாலம் வழியாக ரூ. 250 கட்டணத்தில் விரைவாக பயணிக்க முடியும்.

இந்த நிலையில் நேற்று ஷிர்லி-யில் இருந்து மும்பை சென்ற மாருதி கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து பக்கவாட்டுச் சுவரில் மோதி நின்றது. இதில் இந்த காரில் பயணம் செய்த 2 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை காயங்களுடன் உயிர்தப்பினர்.

பிரதமர் மோடி துவங்கி வைத்த இந்த அடல் சேது மேம்பாலத்தில் ஏறும் போதும் இறங்கும் போதும் 40 கி.மீ. வேகமும் மேம்பாலத்தின் மீது அதிகபட்சமாக 100 கி.மீ. வேகம் செல்ல கட்டுப்பாடு உள்ள நிலையில் முதல்முறையாக இந்த பாலத்தில் மாருதி கார் ஒன்று அதிவேகத்தில் சென்று விபத்தில் சிக்கியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பான காட்சிகள் இந்த வழியாக சென்ற மற்றொரு வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த டாஷ் போர்டு காமெராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.