திஸ்புர்: பாரத் நியாய் யாத்ரா மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி கோயிலுக்குள் நுழைய அசாம் மாநில அரசு தடை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, ராகுல்காந்தி தனது ஆதரவாளர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்.

வடமாநிலங்களில் பேருந்து மற்றும் நடைபயணம் மூலம் பாரத் நியாய் யாத்ரா மேற்கொண்டு வரும் காங்கிரஸ் இளந்தலைவர் ராகுல்காந்தி, தற்போது அசாம் மாநிலத்தில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இவரது யாத்திரை வரும் 25ந்தேதி வரை அசாம் மாநிலத்தில் நடைபெறுகிறது.  ராகுலின் யாத்திரைக்கு கடுமையான கெடுபிடிக்களை விதித்துள்ள மாநில பாஜக அரசு, தற்போது கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுத்துள்ளது.

ராகுல் காந்தி இன்று காலை, அசாம் மாநிலத்தில் உள்ள   15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசாம் துறவியும், அறிஞருமான ஸ்ரீமந்த சங்கர்தேவா பிறந்த இடத்தில் அமைந்துள்ள படத்ராவா சத்ரா கோவிலில் சாமி தரிசனம் செய்ய  சென்றார். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர்,  கோவிலில் சாமி தரிசனம் செய்ய ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து, கோவிலுக்குள் நுழைய தடை ஏற்படுத்தினார்.   இதனால் ராகுல் உள்பட காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கேள்வி எழுப்பிய ராகுல்காந்தி,   “நாங்கள் கோவிலில் தரிசனம் செய்ய சென்றோம். என்னால் கோவிலுக்குள் செல்ல முடியவில்லை. நான் என்ன குற்றம் செய்தேன்?” என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி  தனது ஆதரவாளர்களுடன் அங்கேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்.  இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே கோவில் நிர்வாகம் மதியம் 2 மணிக்கு முன்னதாக சாமி தரிசனம் செய்ய வரவேண்டாம் என கேட்டுக்கொண்ட நிலையில், அதை மீறி ராகுல்காந்தி இன்று காலை தரிசனம் செய்யச்சென்று தேவையின்றி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதாக அம்மாநில மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்து, அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா சர்மா “ராகுல் காந்தி இதுகுறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஒரு பக்கம் ராமர் கோவில் கும்பாபிஷேக நேரலை நடைபெற்று வருகிறது, ஆனால், ராகுல்காந்தி அதற்கு மாறாக,  ஸ்ரீமந்த சங்கர்தேவா பிறந்த இடத்தில் சாமி தரிசனம்  என கூறி செல்வது இடையூறு மற்றும்  மோதலை ஏற்படுத்தும் செயல்,  இது அசாமிற்கு நல்லதல்ல” எனக் கூறி உள்ளார்.