லக்னோ,
மாஜ்வாதி கட்சியில் இருந்து பிரிந்து சென்று தனிக்கட்சி தொடங்கி, காங்கிரசுடன் கூட்டணி வைத்து சட்டசபை தேர்தலை சந்திக்க உ.பி.முதல்வர்  அகிலேஷ் யாதவ் தயாராகி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
தனது தந்தையான முலாயம் சிங் மற்றும் சித்தப்பா சிவ்பால்சிங்-கின் டார்ச்சர் காரணமாக இந்த முடிவு எடுக்க இருப்பதாக தெரிகிறது.
இந்தியாவே மிகவும் எதிர்பார்க்கும், இந்தியாவின் பெரிய மாநிலங்களை கொண்டதும், 403 சட்ட மன்ற தொகுதிகளையும் உடைய   உ.பி. சட்டமன்ற தேர்தல்,  அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது.
இதையொட்டி கடந்த 3 மாதங்களுக்கு முன்பாகவே   காங்கிரஸ், பாரதியஜனதா, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
காங்கிரஸ் சார்பில் அகில இந்திய காங்கிரஸ் துணைத்லைவர் ராகுல்காந்தி உ.பி.யில் இருந்து டெல்லி வரை யாத்திரை மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து வந்தார்.  அதுபோல சமாஜ்வாதி கட்சி சார்பாக அகிலேஷ் யாதவும் யாத்திரை மேற்கொண்டார்.
ஏற்கனவே சமாஜ்வாதி கட்சியில் தற்போதைய முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும், அவரது சித்தப்பாவான சிவ்பாலுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. இந்த விஷயத்தில் முலாயம்சிங் அவரது தம்பியான சிவ்பாலுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங், சட்டமன்ற தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை  அறிவித்தார். இந்த பட்டியலில் அகிலேஷ் பரிந்துரை செய்திருந்த அவரது ஆதரவாளர்கள் பெயர் இடம்பெறவில்லை. ஆனால், அவரது சித்தப்பா சிவ்பால் பரிந்துரைத்த வர்களின் பெயர்களை தேர்வு செய்து வேட்பாளர்களாக  முலாயம் சிங் அறிவித்திருந்தார்.
எதை எதிர்பார்க்காத அகிலேஷ் மீண்டும் தந்தையை சந்தித்து தான் பரிந்துரைத்தவர்களில் ஒரு சிலருக்காவது வாய்ப்பு கொடுக்கும்படி கோரினார். ஆனால், முலாயம்சிங் அவரது கோரிக்கையை நிராகரித்தார்.
இதன் காரணமாக தந்தைக்கும், மகனுக்கும் மீண்டும் மோதல் தொடங்கியது. அதைத்தொடர்ந்து, தனது ஆதரவாளர்களுடன் அகிலேஷ் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
வேட்பாளர் பட்டியல் வெளியான நாள் முதலே, அகிலேஷ் யாதவின் வீட்டில் அவருடைய ஆதரவு எம்.எல்.ஏ.க்களும், நிர்வாகிகளும் குவிந்து வருகின்றனர். மேலும், போட்டியிட வாய்ப்பு கிடைக்காத முன்னாள் மந்திரிகள், எம்எல்ஏக்கள் திரண்டு வந்தனர். அவர்களுடன் மும்முரமாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இதில் சிலர் தாங்கள் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் அகிலேஷிடம் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து அகிலேஷ் புதிய முடிவு எடுத்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் உறுதி செய்கின்றன.
தனது தந்தையான முலாயம்சிங் யாதவ் வெளியிட்ட பட்டியலுக்கு எதிராக, தனது ஆதரவா ளர்களின் பட்டியலை வெளியிட முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது.
அல்லது சமாஜ்வாதி கட்சியை பிளவுபடுத்தி, தனது கட்சியை காங்கிரசுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கலாம் என்று கருதுவதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.
ஏற்கனவே உ.பி. தேர்தல்களம் சூடுபிடித்துள்ள நிலையில், தற்போது சமாஜ்வாதி கட்சியில் ஏற்பட்டுள்ள தந்தை மகனுக்கிடையேயான மோதலும் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.
அகிலேஷ் யாதவ், தன் தந்தையுடன் நேரடியாக மோத தயாராகி விட்டதாக தெரிகிறது.