புதுடெல்லி: மோடி அரசால் பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்ட முத்ரா திட்டம், சொல்லிக்கொள்ளும் வகையில் எந்த பெரிய பலனையும் தரவில்லை என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விபரம் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வின்படி, முத்ரா திட்டத்தின்படி கடன்பெற்ற பயனாளிகளில் ஐந்தில் ஒருவர் மட்டுமே புதிதாக தொழிலை தொடங்கியுள்ளார்களாம். மற்றவர்கள் தாங்கள் ஏற்கனவே செய்துகொண்டிருக்கும் தொழிலையே மேம்படுத்திக்கொள்ள அந்த நிதியைப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்களாம்.

முத்ரா என்ற கடன் திட்டம் ஷிசு, கிஷோர் மற்றும் தருண் ஆகிய வகைப்பாடுகளின் கீழ் மொத்தம் 5.71 லட்சம் கோடிகள் கடனாக வழங்கப்பட்டன. அதாவது, முதல் 3 ஆண்டுகளில் 12.27 கோடி வங்கிக் கணக்குகளின் வழியாக இந்த தொகை வழங்கப்பட்டது. சராசரி கடன் தொகை ரூ.46536.

கடந்த 2017-18 காலகட்டத்தில் வழங்கப்பட்ட கடன் தொகையில் 42% ஷிசு கடன் வகையை சார்ந்தது. 34% கிஷோர் கடன் வகையைச் சார்ந்தது. மீதமுள்ள 24% தருண் கடன் வகையைச் சார்ந்து.

புதிய பணி வாய்ப்புகளை உருவாக்குவதில் ஷிசு வகை கடன்கள் 66% என்ற அளவிலும், கிஷோர் வகை கடன்கள் 18.85% என்ற அளவிலும், தருண் வகை கடன்கள் 15.51% என்ற அளவிலும் பங்காற்றியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.