சென்னை

நாளை போக்குவரத்து ஊழியர்கள் அவசியம் பணிக்கு வர வேண்டும் என மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

நாடெங்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கடும்  போராட்டம் நடைபெற்று வருகிறது.   வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பல இடங்களில் இந்த போராட்டத்தின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல எதிர்க்கட்சி தலைவர்கள் போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகின்றனர்.   தமிழகத்தில்  குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாளை திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் பேரணி ஒன்றை நடத்த உள்ளது.   இதற்காகப் பல தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை போக்குவரத்து ஊழியர்கள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் எனவும் நாளை விடுப்பு எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.   மேலும் ஏற்கனவே நாளை வழங்கப்பட்ட விடுப்புக்களும் ரத்து செய்யப்படுவதாகவும் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.