நேற்றிரவு துபாயில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

முதலில் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது.

193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, ஆரம்பத்தில் அதிரடி காட்டியது, துவக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் 50 ரன்கள் எடுத்தார்.

10.4 ஓவரில் 91 ரன்களில் தனது முதல் விக்கெட்டை பறிகொடுத்த கொல்கத்தா அணி, மளமளவென விக்கெட்டுகளை இழந்து 16.3 ஓவரில் 125 ரன்களுக்கு 8 விக்கெட்டை இழந்து பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டது.

9 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மாவியும் பெர்குசனும் 34 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை 165/9 என்ற கௌரவமான நிலைக்கு கொண்டு சென்றனர்.

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி நான்காவது முறையாக கோப்பையை வென்றுள்ள நிலையில், கோப்பையை வெல்லும் மிக அதிக வயது கேப்டன் என்ற பெருமையை 40 வயதாகும் மஹேந்திர சிங் தோனி பெற்றார்.