4வது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது சென்னை அணி

Must read

துபாய்:
கொல்கத்தா அணியை வீழ்த்தி நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் கைப்பற்றியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், டூ பிளெசிஸ் முதலில் நிதானமாக ஆடினர். பின்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் அணியின் ஸ்கோர் விறுவிறுவென உயர்ந்தது. கெய்க்வாட் 32 ரன்கள் சேர்த்த நிலையில், சுனில் நரைன் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ராபின் உத்தப்பா களமிறங்கினார்.

கொல்கத்தா பந்து வீச்சை வெளுத்து வாங்கிய டூ பிளெசிஸ், 35 பந்துகளில் அரை சதம் கடந்தார். மறுமுனையில் அதிரடி காட்டிய உத்தப்பா, தன் பங்கிற்கு 31 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மொயீன் அலியும் பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக பறக்கவிட்டார். 86 ரன்கள் குவித்த டூ பிளெசிஸ் கடைசி பந்தில் அவுட் ஆனார்.

20 ஓவர் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்களை இழந்து 192 ரன்கள் குவித்தது. மொயீன் அலி 37 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்கள் சுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக விளையாடி ரன்ரேட்டை உயர்த்தினார்கள். பவர் ப்ளேவில் இந்த ஜோடி விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியும் சிஎஸ்கே நெருக்கடி கொடுத்ததால் போட்டி விறுவிறுப்பாக என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

கொல்கத்தா 91 ரன்கள் எடுத்த போது தான் தனது முதல் விக்கெட்டை இழந்தது. தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் 32 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து சர்துல் தாகூர் பந்துவீச்சில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அப்போது ஆரம்பித்த சறுக்கல் கொல்கத்தா அணிக்கு இறுதி வரை தொடர்ந்தது. அதே ஓவரில் நிதிஷ் ராணா ஏதும் எடுக்காமல் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

கொல்கத்தா அணியின் 4-வது வீரராக சுனில் நரைன் இறக்கப்பட்டார். நரைன் மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்த்த நிலையில் 2 ரன்னில் அவுட்டாகி நடையை கட்டினார். நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த சுப்மன் கில்லும் அரைசதம் அடித்த கையோடு தீபக் சஹர் பந்துவீச்சில் அவுட்டாகினர்.

தினேஷ் கார்த்திக் வந்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அதிரடி காட்டினார். இதனால் போட்டியில் பரபரப்பு கூடும் என்ற நினைத்த கையோடு 9 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். ஷகிப் அல் ஹசன் ரன் ஏதும் எடுக்காமலும் ராகுல் திரபாதி 2 ரன்னிலும் கேப்டன் பொறுப்பில் மட்டும் இருந்து வந்த மோர்கன் 4 ரன்னிலும் அவுட்டாகினர்.

இதனால் கொல்கத்தா அணி 125 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்து பரிதாப நிலைக்கு சென்றது. இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சிஎஸ்கே அணி 4-வது முறையாக தோனி தலைமையில் சாம்பியன் பட்டத்தை வென்றது.

More articles

Latest article