போபால்:

மத்திய பிரதேசத்தில் வியாபம் ஊழலை வெளிக் கொண்டு வந்த வாலிபரின் தந்தை மீது அடையாளம் தெரியாத கார் மோதியதில் காயமடைந்தார்.

மத்திய பிரதேசத்தில் மருத்துவ கல்வி துறையில் நடந்த வியாபம் ஊழலை வெளிக் கொண்டு வந்ததில் மு க்கிய பங்காற்றியவர் சதுர்வேதி (வயது 28). இந்த ஊழல் வெளிவந்தவுடன் மர்மமான முறையில் பலர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் சதுர்வேதியின் தந்தை ஓம்பிரகாஷ் இன்று ஸ்கூட்டரில் குவாலியர் சேடக்பூரி சதுக்கம் ப குதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத கார் ஒன்று இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் இவரது மணிக்கட்டு முறிந்ததுது.

தகவலறிந்த சதுர்வேதி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘ சம்பவம் நடந்த இடத்தில் ஒரு போலீஸ் வாகனமும், 5 போலீசாரும் நின்றனர்.

ஆனால் யாருமே எனது தந்தைக்கு உதவி செய்யவில்லை. எனது தந்தை என்னை அழைத்தார். நான் அங்கு சென்று பார்த்தபோது அவர் ரோடில் கிடந்தார். மணி கட்டு உடைந்துவிட்டதால் அவரால் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

37 நிமிடங்கள் எவ்வித உதவியும் இன்றி ரோடில் கிடந்துள்ளார். அங்கு இருந்த போலீசார் ஏதேனும் ஒரு மருத்துவமனையில் அவரை சேர்த்திருக்கலாம். என்னை போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து துன்புறுத்துகின்றனர்’’ என்றார்.

இச்சம்பவம் ஜான்சி சாலை போலீஸ் நிலையம் எதிரே நடந்துள்ளது. இங்கு சதுர்வேதி புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் பதிலளிக்கவில்லை.