டில்லி:
ஹரியானா சாமியார் சம்பவம் தொடர்பாக 3 மாநிலங்களில் பெரும் வன்முறை ஏற்பட்டுள்ளது. தீ வைப்பு சம்பவம், துப்பாக்கி சூடு, பொதுச் சொத்துக்கள் சேதம் உள்ளிட்டவை நடந்து வருகிறது. இது வரை 36 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. பாதுகாப்பு பணியில் துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த வன்முறை சம்பவங்களை முடிவுக்கு கொண்டு வர மத்திய, மாநில பாஜ அரசுகள் கடும் போராட்டத்தை சந்தித்து வருகின்றன.
இச்சம்பவங்கங்களை செய்தி தொலைக்காட்சி சேனல்கள் பல நேரடியாக அவ்வப்போது ஒளிபரப்பி வருகின்றன. இந்நிலையில், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘மீடியாக்களின் கவனத்திற்கு’ என்று ஒரு பதிவை வெளியட்டுள்ளார்.
அதில், ‘‘ வன்முறை சம்பவங்களின் ஒளிபரப்பால் சட்டம் ஒழுங்கு சூழ்நிலை மோசமடைந்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் பீதி, துன்பம் மற்றும் தேவையற்ற பயம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதை தவிர்க்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆலோசனை தேசிய ஒளிபரப்பாளர்கள் சங்க அலுவலகத்திடம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அவர் டுவிட்டரில் திரும்ப திரும்ப பதிவிட்டார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை பதிவு செய்தனர்.
ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டரின் தோல்வியை மறைக்க ஸ்மிருதி ராணி முயற்சிக்கிறாரா? என்று பின் தொடர்பவர்கள் கேள்வி எழுப்பினர். இது போல் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.