சென்னை: தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின் 2வது நாள் கூட்டத்தொடர் தொடங்கியது. சபை தொடங்கியதும் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின்  மறைவுக்கு இன்று இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. அதையடுத்து,  கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது.

தமிழ்நாட்டின் 16வது சட்டப்பேரவையின் முதல்கூட்டத் தொடர் நேற்று கவர்னர் பன்வாரிலால் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் 24ந்தேத வரை நடைபெறும் என அலுவல் ஆய்வு குழுவுவில் முடிவு சய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, தமிழக சட்டசபையின் 2வது நாள்  கூட்டத் தொடர்  இன்று தொடங்கியது.

இன்று கூட்டத்தொடரில்  மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.  சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இரங்கல் குறிப்புகளை வாசித்தார்.

அப்போது மு.பாண்டுரங்கன், அ. முஹம்மத் ஜான் உள்ளிட்ட 13 சட்டப்பேரவையின் முன்னாள் உறுப்பினர்களின் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிரபல திரைப்பட நடிகர் மற்றும் சமூக ஆர்வலர் விவேக், எழுத்தாளர் கி.ராஜநாராயணன், கி . துளசி அய்யா வாண்டையார், சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய அரசியல் நிர்ணய உறுப்பினருமான டி.எம். காளியண்ணன் ஆகியோரின் மறைவு குறித்து இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.

நடிகர் விவேக் மறைவு திரையுலகிற்கும் பேரவைக்கும் பெரிய இழப்பு; விவேக் மரம் நடுதல் உள்ளிட்ட சமூகப் பணிகளில் ஈடுபட்டவர், ‘சின்ன கலைவாணர்’ என்றழைக்கக்கூடியவர், என்று சபாநாயகர் அப்பாவு புகழாரம் செலுத்தினார்.

பின்னர் சட்டப்பேரவையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து,சட்டப்பேரவையின் மாற்றுத்தலைவர்களாக அன்பழகன், ராமகிருஷ்ணன், உதயசூரியன், எஸ்.ஆர்.ராஜா, டி.ஆர்.பி.ராஜா, துரை சந்திர சேகரன் ஆகியோரை பேரவையின் மாற்றுத்தலைவர்களாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

அதையடுத்து, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முன்னதாக நேற்று கவர்னர் உரையில், வேளாண்மைக்கு தனி பட்ஜெட் போடப்படும், உழவர் சந்தைக்கு புத்துயிர், அரசு வேலை வாய்ப்பில் தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை போன்ற முக்கிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.