டில்லி,

ரட்டை இலை சின்னத்தை பெற  தேர்தல் ஆணையத்துக்கு ரூ50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதிமுக அம்மா பிரிவு டிடிவி தினகரன்மீது  3 பிரிவுகளில் டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

டிடிவி தினகரனிடம் லஞ்சம் பெற்றதாக புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் ராவ் என்ற மோசடி பேர்வழி கைது செய்துள்ள டில்லி காவல்துறை, அவர் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில்  தினகரனை கைது செய்து விசாரிக்க  டில்லி போலீசார் சென்னை வருகின்றனர்.

இதுகுறித்து டில்லி காவல்துறை துணை கமிஷனர் மதுர் வர்மா நிருபர்களிடம் கூறியதாவது,

தேர்தல் ஆணையத்தில் தனது செல்வாக்கை பயன்படுத்தி அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மீட்டுத் தருவதாக கூறி பணம் பெற்றதாக சுகேஷ் சந்திரசேகர் என்பவரை கைது செய்துள்ளோம்.

அவரிடம் இருந்து 1.30 கோடி பணம், 2 ஆடம்பர கார்ள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

லஞ்ச தடுப்பு சட்டத்தின், 8வது பிரிவு, ஐபிசி சட்டத்தின் பிரிவுகள், 170, 120பி ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம். சுகேஷ் சந்திரசேகர் இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்.

தற்போது  விசாரணை நடைபெற்று வருவதால் வேறு தகவல்களை தெரிவிக்க முடியாது என்ற வர்மா, தினகரன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து டிடிவி தினகரனை கைது செய்து  டில்லி அழைத்து சென்று விசாரணை செய்ய டில்லி போலீசார் முடிவு செய்துள்ளதாகவும், அதற்காக இன்று இரவு அவர்கள் சென்னை வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.