கேரள எம்.பி. தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரஸ் கூட்டணி வெற்றி

Must read

திருவனந்தபுரம்,

கேரளா, மலப்புரம் தொகுதியில் நடைபெற்ற எம்.பி.க்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்  குஞ்சாலி குட்டி வெற்றி பெற்றார்.

கேரள மாநிலம் மலப்புரம் தொகுதியின் எம்.பி.யாக இருந்தவர் அகமது. இவர் பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்றபோது மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.

கடந்த ஜனவரி 31ந்தேதி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராளுமன்றத்தை தொடங்கி வைத்து இந்த ஆண்டின் முதல் உரையை  நிகழ்த்திக் கொடிருந்தார். அப்போது, கேரளாவை சேர்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்.பி.,யான, இ.அகமது, திடீரென தன் இருக்கையில் மயங்கி சரிந்து விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், அவர் வெற்றி பெற்ற தொகதியான மலப்புரம் தொகுதியில் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி  கடந்த 12-ந்தேதி அங்கு ஓட்டு பதிவு நடைபெற்றது.

இந்த தேர்தலில்  காங்கிரஸ் கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் குஞ்சாலிகுட்டி வேட்பாளராக போட்டியிட்டார்.

இவரை எதிர்த்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி சார்பில் பைசலும், பாரதீய ஜனதா கூட்டணி சார்பில் ஸ்ரீபிரகாசும் போட்டியிட்டனர்.

மும்முனை போட்டி நிலவியது. இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்க தொடங்கியது.

ஆரம்பம் முதலே முன்னணியில் வந்துகொண்டிருந்த காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் குஞ்சாலி குட்டி 1,71,038 வாக்குகள் வித்தியாசத்தில் அவரை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்டு, பாரதியஜனதா வேட்பாளர்களை தோற்கடித்தார்.  அவர் மொத்தம் 5, 15,325 வாக்குகள் பெற்றிருந்தார்.

அவருக்கு அடுத்தபடியாக வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் பைசல் 3, 44, 287 வாக்குகளும், 3- வது இடம் பிடித்த பாரதீய ஜனதா வேட்பாளர் ஸ்ரீபிரகாஷ் 65,662 வாக்குகளும் பெற்றனர்.

காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக குஞ்சாலி குட்டி வெற்றி பெற்றதும் அவரை தோளில் தூக்கி வைத்து அவரது கட்சியினர் கொண்டாடினர்.

கேரளா முழுவதும் காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் கட்சியினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

ஏற்கனவே கர்நாடகாவில் நடைபெற்ற 2 தொகுதி தேர்தல்களிலும் காங்கிரஸ் வெற்றிபெற்றது. இந்நிலையில் தற்போது கேரளாவிலும் காங்கிரஸ் கூட்டணியே வெற்றிபெற்றிருப்பதால்,  தென் மாவட்டங்களில் ஆட்சியை பிடிக்க நினைக்கும் பாரதியஜனதாவுக்கு இது மேலும் இடி என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

More articles

Latest article