சென்னை

மெரிக்க ஸ்டாம்பர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள உலகின் சிறந்த 2% விஞ்ஞானிகள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 100க்கும் அதிகமானோர் உள்ளனர்.

உலகின் மிகச் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலை அமெரிக்காவின் புகழ்பெற்ற ஸ்டாம்பர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.   அதில் 1,86,177 விஞ்ஞானிகள் இடம் பெற்றுள்ளனர்.  இவர்களில் 2042 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவார்.   இந்த இந்தியர்களில் 100க்கும் அதிகமானோர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த பட்டியலில், பெரும்பாலும் வேதியியல், நானோ அறிவியல், மெக்கனிக்கல் இன்ஜினியரிங், மெடிரியல் சைன்ஸ், உயிர் தகவலியல், அட்டோமேஷன், எனர்ஜி, புவியியல், சுற்றுச்சூழல் அறிவியல் ஆகிய படிப்புகளில் நிபுணர்கள் தான் இடம்பெற்றுள்ளனர்.

சென்னை நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையைச் சேர்ந்த டாக்டர் வி மோகன், தரவரிசை பட்டியலில் 8,741 இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். ஐஐடி மெட்ராஸிலிருந்து மட்டும் 47 பேராசிரியர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். மற்ற மாநிலத்தின் உள்ள ஒரு நிறுவனத்தில் இடம்பிடித்த அதிக எண்ணிக்கை ஆகும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் உட்பட மூன்று பேராசிரியர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இது குறித்துப் பேசிய வேல்ராஜ், உலகின் சிறந்த 2% விஞ்ஞானிகளின் சமீபத்திய பட்டியலில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு துறைகளில் சுமார் 150 பேராசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் நான் இடம்பிடித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் பிரத்தியேகமாக 2020ஆம் ஆண்டில் ஏற்பட்ட தாக்கத்தை மட்டும் மதிப்பீட்டு இரண்டாவது பட்டியலை வெளியிட்டது. அதில், அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 13 பேராசிரியர்கள் இடம்பிடித்தனர்.  புவியியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் எல் இளங்கோ ஹைட்ரஜியாலஜியில் முதலிடத்தைப் பிடித்தார். அவர் கூறுகையில், தனது பிஎச்டி மாணவர்களின் கடின உழைப்பால் உயர் தரவரிசை சாத்தியமானது” என்றார்

மாநிலப் பல்கலைக்கழகங்களில், பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தலா ஒன்பது பேரும், அழகப்பா பல்கலைக்கழகத்தில் 4 பேரும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 3 பேரும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தலா இரண்டு பேரும் இடம் பெற்றுள்ளனர்.

தனியார் நிறுவனங்களில், வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (விஐடி) பட்டியலில் 14 பேரும், கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் 10 பேரும், எஸ்ஆர்எமில் நான்கு பேரும், அமிர்தா ஸ்கூல் ஆஃப் இன்ஜினியரிங் மற்றும் பிஎஸ்ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜியில் இருந்து தலா இரண்டு பேரும் இடம் பெற்றுள்ளனர்.