பெங்களூரு

ரும் ஆகஸ்ட் 15 முதல் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2000 திட்டம் அமலாகும் என கர்நாடக  முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின்போது 5 வாக்குறுதிகளை அளித்தது., காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.3 ஆயிரம், டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500, 2 ஆண்டுகளுக்கு அளிக்கப்படும். மகளிருக்கு அரசுப் பேருந்தில் இலவச பயணம் அனுமதிக்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம், மாதம் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் ஆகிய  உத்தரவாத வாக்குறுதிகளை அறிவித்தது.

கடந்த 5 நாட்களாக முதல்வர் சித்தராமையா இலவசத் திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து தலைமைச் செயலர், நிதித்துறைச் செயலர், மூத்த அதிகாரிகள், பொருளாதார வல்லுநர்கள் ஆகியோருடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டார். தற்போது முதல்வர் சித்தராமையா ஐந்து வாக்குறுதிகள் தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் சித்தராமையா,

க்ருஹ ஜோதி திட்டம் மூலம் 200 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் ஜூலை 1 முதல் தொடங்கு. ஆனால், ஏற்கெனவே உள்ள நிலுவைத் தொகைகளை வாடிக்கையாளர்கள் கட்ட வேண்டும்.

க்ருஹ லக்‌ஷ்மி என்ற திட்டத்தின் கீழ் இல்லத்தரசிகளுக்கு ரூ.2000 மாதந்தோறும் வழங்குதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும். இதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 15 முதல் ஜூலை 15 வரை வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் ஆதார் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களைக் குறிப்பிட வேண்டும்.

அன்ன பாக்யா திட்டம் மூலம் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்கு வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.

யுவாநிதி திட்டத்தின் கீழ், வேலைவாய்ப்பில்லாத இளைஞர்கள், அதாவது 2022 – 2023 காலத்தில் பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு வேலை கிடைக்கும் வரை அதிகபட்சமாக 24 மாதங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000, பட்டயப் படிப்பு பயின்றவர்களுக்கு ரூ.1500 என்ற அளவிலும் நிதியுதவி வழங்கப்படும்” 

பெண்களுக்குப் பேருந்தில் இலவசப் பயணம் வழங்கும் திட்டம் ஜூன் 11-ஆம் தேதி முதல் செயல்முறைக்கு வரும். ஆனால், கர்நாடகா மாநிலத்திற்குள் மட்டுமே பெண்கள் இச்சலுகையைப் பெற இயலும். மாநிலங்களுக்கு இடையேயான கர்நாடக அரசுப் பேருந்தில் இச்சலுகையைப் பெற இயலாது. அதேபோல் ஏசி மற்றும் சொகுசுப் பேருந்துகளிலும் இந்தச் சலுகை இல்லை. சாதாரண கட்டணம் உள்ள பேருந்துகளில் மட்டுமே இச்சலுகை பொருந்தும். பேருந்து இருக்கைகளில் 50 சதவீதம் ஆண்களுக்கென்று ரிசர்வ் செய்யப்படும். எஞ்சியுள்ள இருக்கைகளில் பெண்கள் சலுகையுடன் இலவசமாகப் பயணிக்கலாம்.

என்று  கூறினார்.