மல்யுத்த வீரர்களுக்கு இந்திய மல்யுத்த அமைப்பு தலைவரால் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது சம்பந்தமாக அரசு விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்று 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் உலகக் கோப்பை வென்ற கிரிக்கெட் அணியினர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவர் பிர்ஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யக் கோரி போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்கள் மே 28 அன்று, அனுமதியின்றி புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றதாகக் கூறி டெல்லி காவல்துறை அவர்களை கைது செய்தது.

இதனையடுத்து மே 30 அன்று ஹரித்வாருக்கு சென்ற வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் தங்கள் பதக்கங்களை கங்கையில் வீசப்போவதாக கூறினர்.

இந்த நிலையில் மல்யுத்த வீரர்கள் தங்கள் பதக்கங்களை புனித கங்கை நதியில் மூழ்கடிக்கும் தீவிர நடவடிக்கையை கைவிடக்கோரி 1983 உலகக் கோப்பையை வென்ற கிரிக்கெட் அணியின் உறுப்பினர்கள் இன்று கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தவிர, மல்யுத்த வீரர்கள் எந்த ஒரு தவறான முடிவும் எடுக்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளனர்.

அந்த பதக்கங்கள் பல ஆண்டுகால முயற்சி, தியாகம், உறுதிப்பாடு மற்றும் மன உறுதியை உள்ளடக்கியவை, மேலும் அவை அவர்களுடையது மட்டுமல்ல, தேசத்தின் பெருமையும் மகிழ்ச்சியும் ஆகும். இந்த விஷயத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம், மேலும் அவர்களின் குறைகள் கேட்கப்பட்டு விரைவில் தீர்க்கப்படும் என்று நாங்கள் அன்புடன் நம்புகிறோம். நாட்டின் சட்டம் வெல்லட்டும்” என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.