ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு  பணம் வாரி வழங்கப்பட்டு வருகிறது, ஆனால், அதை தடுக்க வேண்டிய தேர்தல் அதிகாரிகள் என்ன செய்கிறார்கள், எங்கே போனர்கள் என தெரியவில்லை என தேமுக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பரப்புரையின்போது தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடினார்.

இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. 77பேர் களத்தில் இருந்தாலும், காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சிகளுக்கு இடையேதான் போட்டி நிலவுகிறது. இவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி, திமுக அமைச்சர்கள் குழு அங்கு முகாமிட்டு பணியாற்றி வருகிறது. அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக எடப்பாடி தரப்பினரும், பாஜகவினUம் வாக்கு வேட்டையாடி வருகின்றனர். தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் சுதீஷ், விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் உள்பட பலர் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

நேற்று இரவு 2வது நாளாக அந்த தொகுதியில் உள்ள  அக்ரஹாரம், கருங்கல்பாளையம் விநாயகர் கோவில் வீதி, பண்ணாரி அம்மன் கோவில் வீதி உள்ளிட்ட இடங்களில் வாக்காளர்கள் மத்தியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்களிடையே பேசிய பிரேமலதா,  .ஈரோடு கிழக்கு தொகுதி முதன்முறையாக உதயமாகிய போது அதன் சட்டமன்ற உறுப்பினராக தேமுதிக இருந்தது என்பதை நினைவு கூர்ந்தவர்,  இன்று ஆளும் திமுக மக்களை ஆடு, மாடு போல் பட்டியில் அடைத்து வைத்துள்ளது. இதுதொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதை  தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது.

இங்கு பாதுகாப்புக்கு துணை ராணுவம் வந்துள்ளார்கள். ஆனால் அவர்கள்  எதற்கு இங்கே வந்துள்ளார்கள் என்றே தெரியவில்லை. பல இடங்களில் மக்களை ஆட்டு மந்தையை அடைப்பது போல் அடைந்து வைத்துள்ளனர். ஒரு இடத்திற்கு கூட துணை ராணுவம் சென்று அடைத்து வைத்துள்ள மக்களை திறந்து விடவில்லை, எதற்காக துணை ராணுவம் இங்கே வரவேண்டும்,

இங்குள்ள வாக்காளர்களிடம் இருந்து வாக்குகளை பெற   திமுக மற்றும் அதிமுகவினர் மாறி மாறி பணத்தையும், பொருளையும் வாரி வழங்கி வருகின்றனர். ஆனால், அதை இங்குள்ள தேர்தல் அதிகாரிகளோ, இங்கு வந்துள்ள துணை ராணுவ படையோ கண்டுகொள்ள வில்லை. இதுதொடர்பாக  ஒருவரை கூட பிடிக்கவில்லை, ஆனால் இதுதொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

டாஸ்மாக் கடையை மூடுவோம் என கூறியவர்கள் இன்று அதை பற்றி பேசுவதே இல்லை. பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றும் திமுகவை  புறக்கணித்து, தேமுதிகவிற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்,  திமுக அமைச்சர்கள் சைகோவாக அலைந்து கொண்டுள்ளார்கள், மக்களின் ஏழ்மையும், வறுமையையும் பயன்படுத்தும் திமுகவிற்கு இந்த இடைத்தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் . மின்கட்டணம் ராக்கெட் வேகத்தில் ஏறிக் கொண்டுள்ளது, தேர்தலின் போது திமுக கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என சரமாரியாக குற்றம் சாட்டிவர், தமிழ்நாட்டில் பெண்களுக்காக என்றும், எப்போதும் சகோதரியாக துணை நிற்பேன், தமிழக மக்கள் ஒரு மாற்றத்திற்கான வாய்ப்பை தர வேண்டும்.

இவ்வாறு பேசினார்.