புதுடெல்லி: கொரோனா காரணமாக, கடன் தள்ளுபடி அறிவிப்புகள் அரசின் சார்பில் வெளியிடப்படலாம் என்ற வதந்திகளைப் பயன்படுத்தி, பலர், வாடிக்கையாளர்களிடம் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக, மைக்ரோ கடன் வழங்கும் நிறுவனங்கள் இத்தகையப் பிரச்சினையை அதிகம் எதிர்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. எனவே, அரசு இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.‍

மைக்ரோ கடன் வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான சத்யா மைக்ரோ கேபிடல்ஸ் நிறுவனத்தின் சிஇஓ கூறியுள்ளதாவது, “தற்போதைய நிலையை பயன்படுத்தி, சில சமூக விரோத சக்திகள் மக்களை தவறாக வழிநடத்த முயற்சி செய்து வருகிறார்கள். அவர்கள், அரசாங்கங்கள் கடன்களை தள்ளுபடி செய்ய இருப்பதாக வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, கடன் தள்ளுபடி அறிவிப்பை விரைவில் வெளியிட அரசை நிர்ப்பந்திக்கும் வகையில் போராட இருப்பதாகவும் கூறி, நிறுவனத்தின் உறுப்பினர்களிடம் ரூ.500 அல்லது ரூ.1,000 என்று வசூலித்து வருகிறார்கள். வசூலாகும் இந்தப் பணத்தை தங்களின் சொந்த செலவுக்குப் பயன்படுத்தி கொள்கிறார்கள். எனவே, அரசின் சார்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றுள்ளார் அவர்.