ஈரோடு:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத  மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று சென்னையில் ராணுவ கண்காட்சியை தொடங்கி வைக்க மோடி தமிழகம் வந்துள்ளார்.

மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் கருப்பு கொடி போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மோடி சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே வாலிபர் ஒருவர் தீக்குளித்தார். அவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஈரோடு அருகே உள்ள சித்தோடு ஆரம்ப சுகாதார நிலைய பகுதியை சேர்ந்த பொம்மை வியாபாரம் செய்து வந்த தர்மலிங்கம் என்பவர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார்.

முன்னதாக அவர் தனது வீட்டின் சுற்றில், தனது வீட்டு சுவற்றில் “மத்திய அரசே கர்நாடக அரசே காவிரி நீர் தமிழ்நாட்டின் உயிர்நீர், எடப்பாடி திரு.பழனிசாமி நீங்கள் தமிழனா? இல்லையா? தமிழக மக்களிடம் துணிந்து சொல்லுங்கள் பார்க்கலாம், தமிழகம் வருகிற நரேந்திர மோடிக்கு என்னுடைய எதிர்ப்பு இது”

– பா.தர்மலிங்கம். என்று எதியிருந்தார்.

தர்மலிங்கம் தீக்குளித்ததை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக ஈரோடு அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர் அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்ற நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரழந்தார்.

இந்த சம்பவம் குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வாலிபர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தீக்குளித்து இறந்த வாலிபர் தர்மலிங்கத்துக்கு பெற்றோர் கிடையாது என்றும், பாட்டியின் அரவணைப்பில்தான் வாழ்ந்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.