சென்னை:

பிரதமர் மோடி சென்னை வந்திருப்பதையொட்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று  கருப்பு கொடி போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்புகொடி ஏற்றியும், மோடி எதிராக கருப்பு கொடியை காட்டி  ஆர்ப்பாட்டமும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் பல்வேறு அரசியல் கட்சியினர், தமிழர் அமைப்புகள் சார்பில் கருப்புகொடி போராட்டம் நடைபெற்றது.

சென்னை சின்னமலையில், வைகோ தலைமையில் மதிமுகவினர்  கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம். அதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

அதுபோல  திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி  கருப்பு சேலை அணிந்து போராட்டத்தில் குதித்தார். அவருடன் திமுகவினரும் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

சென்னை  சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே கருப்புக்கொடி ஏற்றி பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மற்றும் கட்சியினர், சென்னை பெரியார் திடலில் பிரதமர் மோடி சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர். கி.வீரமணியின் இல்லத்தலும் கருப்புகொடி ஏற்றப்பட்டது.

அதுபோல சென்னை விமான நிலையத்திற்குள் பலத்த பாதுகாப்பையும் மீறி இயக்குனர்கள் பாரதிராஜா, வெற்றி மாறன், கவுதமன், அமிர்  ஆகியோர் சென்று, மோடிக்கு எதிராக கோஷமிட்டு  போராட்டம் நடத்தினார்.

சென்னை விமான நிலையம் எதிரே போராட்டம் நடத்திய எம்.எல்.ஏக்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.

சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர்  சென்னை திரிசூலம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். நெடுமாறன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் ஒரு குழுவினர்  ஆலந்தூர், சின்னமலை பகுதியில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விமான நிலையத்தில் போடப்பட்டுள்ள  7 அடுக்கு  பாதுகாப்பையும் மீறி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் விமான நிலையத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்தினார்கள். விமான நிலையத்தில் விளம்பர பேனர் வைக்கும் கம்பத்தின் மீது ஏறி போராட்டம் நடத்தினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் பல இடங்களில் கருப்பு பலூன்களையும் பறக்கவிட்டும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்

சென்னை நடைபெற்ற கருப்பு கொடி போராட்டம் காரணமாக பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.