சென்னை: சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கம் மற்றும் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைக்க வரும் 14ந்தேதி சென்னை வரும் பிரதமர் மோடி சுமார் 3 மணி நேரம் மட்டுமே சென்னையில் தங்கியிருக்கிறார். அதனால், அவரது தேர்தல் பிரசார பயணம் கேள்விக்குறியாகி உள்ளது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் இன்னும் 2 மாதங்களில் நடைபெற உள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவும் இருந்து வருகிறது. இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிப்பங்கீடு இறுதியாகாத நிலையிலும் கூட்டணி தொடர்வதாக இரு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் சென்னை வருகை, அவரது தேர்தல் பிரசார பயணமாக இருக்கும் என பாஜகவினர் கூறி வந்தனர். ஆனால், மோடியின் சென்னை பயணம் அரசு முறை பயணம் என்பது தெரிய வந்துள்ளது.

மோடியின் பயண விவரங்கள் இன்று வெளியாகி உள்ளது. அதன்படி,

டெல்லியில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்பட்டு 10:35 மணிக்கு சென்னை வருகிறார்.

10.40 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்படும் பிரதமர், 11 மணி அளவில் சென்னையில் அமைந்துள்ள  ஹெலிபேடு வந்தடைகிறார்.

அங்கிருந்து கார் மூலம் சென்னை நேரு ஸ்டேடியம் வரும் மோடி, 11.15 மணிக்கு அங்கு  தொடங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.  இதற்கான நேரம் 12.30 வரை ஒதுக்கப்பட்டு உள்ளது.

அதைத்தொடர்ந்து, 12.35 மணி முதல் 12.50 வரை ஓய்வு எடுக்கிறார்.

பின்னர், 12.55க்கு கார் மூலம் புறப்படும் பிரதமர், 01.05 மணிக்கு ஹெலிபேடு வந்தடைகிறார்.

அங்கிருந்து 01.10 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு 01.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.

அதைத்தொடர்ந்து 01.35 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து கொச்சி புறப்படுகிறார்.  மாலை 02.45 மணிக்கு கொச்சியில் உள்ள கருடா விமான நிலையம் சென்றடைகிறார்.

பிரதமரின் நிகழ்ச்சியின்போது,  வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் வரையிலான மெட்ரோ சேவை தொடக்கம்,  சென்னை மெட்ரோ விரிவாக்கம் ஆவடி பீரங்கி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ‘அர்ஜுன் மார்க்-2’ என்னும் புதிய வகை பீரங்கியை மோடி அறிமுகம் செய்வது மற்றும் பல நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கிறார்,

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மோடியின் தேர்தல் சுற்றுப்பயணம் 14ந்தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மோடி அரசு முறை பயணமாக மட்டுமே சென்னை வருவது உறுதியாகி உள்ளது.

அன்றைய தினம் (14ந்தேதி)  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் 2வது கட்ட தேர்தல் பிரசாரதிற்காக தமிழகம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.