புதுடெல்லி:

வரும் 30-ம் தேதி இரவு 7 மணிக்கு நரேந்திர மோடி பதவியேற்பு விழா நடைபெறும் என குடியரசுத் தலைவர் மாளிகை அறிவித்துள்ளது.


17-வது மக்களவையில் 353 தொகுதிகளை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.  இதில் பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்றது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்களின் கூட்டம் டெல்லி நாடாளுமன்றத்தில் உள்ள மைய மண்டபத்தில் சனிக்கிழமை நடந்தது.

இதில் கூட்டணி கட்சியினரில் ஆதரவுடன் மோடி பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, மத்தியில் ஆட்சி அமைக்க வருமாறு நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் வரும் 30-ம் தேதி இரவு 7 மணிக்கு நரேந்திர மோடி பதவியேற்பு விழா நடைபெறும் என குடியரசுத் தலைவர் மாளிகை அறிவித்துள்ளது.

அவருடன் மத்திய அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.