புதுடெல்லி:

வாங்கப்பட்ட ரஃபேல் விமானங்கள் இந்தியாவுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதற்கு, பிரதமர் மோடியே முழுப் பொறுப்பு என காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

கடந்த 2-ம் தேதி அகில இந்திய  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை கடுமையாக சாடியிருந்தார்.

” ரஃபேல் போர் விமானம் இந்தியாவுக்கு இன்னும் வராததற்கு பிரதமர் மோடியே காரணம் என்றும், அவரின் வீண் தம்பட்டம், போலியான வீரம், நாசிச பொய் ஆகியவற்றை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது.

அன்புக்குரிய பிரதமர் அவர்களே, இவை எல்லாம் உங்களுக்கு வெட்கமாக இல்லையா? ரஃபேல் விமானத்துக்காக ரூ.30 ஆயிரம் கோடியை உங்கள் நண்பர் அனில் அம்பானியிடம் கொடுத்துள்ளீர்கள். பணம் கொடுத்தும் விமானங்கள் இன்னும் வரவில்லை. இத்தகைய தாமதத்துக்கு நீங்களே காரணம். வாழ்க்கையை பணயம் வைத்த விங் கமாண்டர் அபிநந்தனைப் போல் உங்கள் வீரம் இல்லையே ஏன்?” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்த பிரதமர் மோடி, ” இன்றைய சூழலில் ரஃபேல் விமானம் இல்லையே என நாடே கேட்கிறது. நம்மிடம் ரஃபேல் விமானம் இருந்திருந்தால், இன்றைக்கு நிலைமையே வேறு விதமாக இருந்திருக்கும் என்பதே, நாடு முழுவதும் ஒலிக்கும் ஒரே குரல்.

ரஃபேல் விவகாரத்தில் சுயநலம் மற்றும் அரசியல் கலந்ததால், நாட்டுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சூரஜ்வாலா வாலா கூறும்போது, பிரதமருக்கு பிடித்த ஒரே வார்த்தை மோடி தான். இந்தியாவில் ஜனநாயக முறைப்படி பல்வேறு கருத்துகளை பிரதிபலிக்கும் 132 கோடி மக்கள் இருக்கிறார்கள் என்பதை பிரதமர் மோடி மறந்துவிட்டார்.
பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதத்துக்கு எதிராக மோடி எப்போது உறுதியான நடவடிக்கையை எடுத்தார். தேசிய பாதுகாப்பை சமரசம் செய்து கொள்வதும், ஒட்டுமொத்த புலனாய்வுத் தோல்வியும் மோடி அரசின் செயல்படாத தன்மையை காட்டுகின்றன.

கடந்த 56 மாதங்களில் ஜம்மு காஷ்மீரில் 498 படை வீரர்களும், அதிகாரிகளும் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். 2019 பிப்ரவரியில் மட்டும், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதத்தால் 55 வீரர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர்.

பிரதமர் மோடி இந்திய வீரர்களின் வீரம் மற்றும் தியாகத்தை அப்பட்டமாக அரசியலாக்கப் பார்க்கிறார். அரசியல் ஆதாயத்துக்காக இந்த பிரச்சினையை பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறார்.

பொருளாதாரப் பிரச்சினையையும் இந்த அரசு மோசமாக கையாளுகிறது. மோடியின் திட்டமிடப்படாத கொள்கைகளும், குறைந்த நோக்குப் பார்வையும் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கின்றன.

மோடிப் பொருளாதாரம் நாட்டுக்கே ஆபத்தானது என்பதை பொருளாதார நிபுணர்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.
மோடி அரசை வழியனுப்பி வைக்க இன்னும் 50 நாட்கள் இந்தியா காத்திருக்க வேண்டியுள்ளது” என்றார்.