டெல்லி: கொரோனா தடுப்பூசியை முதலில் பிரதமர் மோடி போட்டுக் கொண்டு நாட்டு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பு மருந்துகளை  அவசர காலத்துக்கு பயன்படுத்தி கொள்ள மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியது. இந் நிலையில் தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், கொரோனா தடுப்பூசி கோவாக்சின் மருந்துக்கு அவசர ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.  3ம் கட்ட பரிசோதனையில் இருப்பதால் முன்கூட்டியே வழங்கி இருப்பது ஆபத்தானது என்றார்.

இந் நிலையில் பீகார் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் அஜித் சர்மா கூறியதாவது: புத்தாண்டில் 2 தடுப்பூசிகள் கிடைத்ததில் மகிழ்ச்சி. ஆனால் இது குறித்து மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவிலும் அமெரிக்காவிலும் உள்ள அதன் தலைவர்கள் முதல் தடுப்பூசியை போட்டு கொண்டதை போல பிரதமர் மோடியும் முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களின் சந்தேகத்தை தீர்க்க வேண்டும்.

தடுப்பூசி தயாரித்த 2 நிறுவனங்களும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்டவை. எனவே மக்கள் நன்றிகளை காங்கிரசுக்கும் தெரிவித்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.