புதுடெல்லி: கடந்த ஒரு மாதத்திற்குள் மட்டுமே, இதுவரை இல்லாத வகையில், மொத்தம் 157 திட்டங்களை தொடங்கிவைத்து சாதனை புரிந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

தேர்தல் தேதி அறிவிப்புக்குள் பல விஷயங்களை செய்துவிட வேண்டுமென்ற முஸ்தீபுடன் களமிறங்கிய மோடி, ஒரே மாதத்திற்குள் நாடு முழுவதும் 28 பயணங்களை மேற்கொண்டு, 157 திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார்.

நெடுஞ்சாலை, ரயில்வே, மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், எரிவாயு இணைப்புக் குழாய்கள், விமான நிலையங்கள், மின்சார உற்பத்தி மையங்கள், தண்ணீர் இணைப்புகள் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் என்று தலைசுற்றும் அளவிற்கான பலதரப்பட்ட திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார்.

ஏனெனில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால், புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்கவோ அல்லது தொடங்கி வைக்கவோ முடியாது என்பதாலேயே இந்த அவசரம் என்பதை பலரும் புரிந்துகொண்டுள்ளனர்.

கடந்த பிப்ரவரி 8 முதல் இந்த மார்ச் 9ம் தேதி வரையிலான காலகட்டத்தில்தான், பிரதமர் மோடி இப்படி பம்பரமாக சுழன்றுள்ளார்.

ஆனால், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், 2014ம் ஆண்டின் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கான கடைசி மாதத்தில், இதுபோன்ற எந்தவித பயணத்தையும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

– மதுரை மாயாண்டி