கமதாபாத்

டந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த மதக் கலவரத்துக்கும் அப்போதைய முதல்வர் மோடிக்கும் தொடர்பு இல்லை என நானாவதி கமிஷன் அறிவித்துள்ளது.

குஜராத் மாநிலம் கோத்ரா ரெயில் நிலையத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு கரசேவகர்கள் பயணம் செய்த ரெயில் பெட்டி தீக்கு இரையானது.  இதனால் மாநிலத்தில் கடுமையான மத வன்முறைகள் நிகழ்ந்தன.  இந்த வன்முறையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர்.   இதனால் உலகே அதிர்ச்சி அடைந்தது.  அப்போதைய முதல்வர் மோடியும் அவர் அரசும் இந்த கலவரத்துக்குக் காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.

அதையொட்டி தொடரப்பட்ட பல வழக்குகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.    கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த இந்த வன்முறைகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நானாவதி கமிஷன் அறிக்கை இன்று அம்மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.   இந்த அறிக்கையை நானாவதி  கமிஷன் கடந்த 2014 ஆம் ஆண்டு அரசுக்கு அளித்துள்ளது.

குஜராத் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நானாவதி கமிஷன் அறிக்கையில், “கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த வன்முறைகள் திட்டமிட்டு நடந்தவை அல்ல. இந்த நிகழ்வுகளுக்கும் அப்போதைய முதல்வர் மோடி, மற்றும் அவரது அரசுக்கு எவ்வித தொடர்பும் இல்லை.  இந்த வழக்கில் மோடி குற்றமற்றவர்” எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.