ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் போஸ்ட்பெய்டு மொபைல் சேவைகளின் முடக்கம் ரத்தானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு எஸ்எம்எஸ் சேவைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அங்கே 25 லட்சம் ப்ரீபெய்டு மொபைல் சேவைகள் மற்றும் இணையதள சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன. நேற்று மாலை முதல் எஸ்எம்எஸ் சேவைகள் முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி முதல் காஷ்மீரில் என்ன நடக்கிறது என்றே வெளியுலகிற்கு தெரியவில்லை. அம்மாநிலத்தில் மிக முக்கிய தலைவர்கள் தொடர்ந்து வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளதால், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட எந்த அம்சங்களும் பயன்பாட்டில் இல்லை.

இணைய சேவைகளின் முடக்கம் விரைவில் ரத்தாகும் என்று காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் கூறினாலும், இணைய சேவைகள் மீண்டும் தொடங்க, குறைந்தது இன்னும் 2 மாதங்களாவது ஆகும் என்று பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ப்ரீபெய்டு மொபைல் சேவைகள் தொடர்பான முடிவு அடுத்த மாதம் மேற்கொள்ளப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

காஷ்மீரில் மிகப்பெரிய அளவில் மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதாக பல்வேறு தகவல்கள் கூறுகின்றன.