மகாராஷ்டிரா: விபிஏ எனப்படும் வஞ்சித் பகுஜன் அகாதி யின் தலைவர் பிரகாஷ் அம்பேதத்கர், நடைபெறும் தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜகதலைவர்கள் பேசுவது ஜனநாயகத்திற்கு சிறிதும் பொருந்தாத சர்வாதிகாரத் தன்மை கொண்டதாக இருக்கிறது என கூறியுள்ளார்.

பாஜக தலைமையிலான இந்த அரசு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. ஆனால், அவற்றை செயல்படுத்துவதில் முந்தைய ஆட்சியாளர்கள் கையாண்ட வழிமுறைகளிலிருந்து சற்று மாறுபடுகிறது எனவும் அவர் கூறினார்.

சாலை வசதி ஏற்படுத்துவதற்காகப் போடப்பட்ட பல்வேறு திட்டங்களும் அரசாங்கத்திற்காகப் பணத்தைப் பெற்றுத் தரும் வழிகளாகவே இருக்கின்றன. அத்துடன், இவர்கள் அமுல் படுத்தும் நலத்திட்டங்கள் அனைத்தும் முந்தைய ஆட்சியாளர்கள் செய்தவைகளேயாகும்.

சத்துக்குறைபாடு என்பது பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் கிராமங்களில் மட்டுமல்லாமல் மற்ற பகுதிகளிலும் பரவியுள்ளது. ஆனால், அரசு அதைப் பற்றிப் பேச விரும்புவதில்லை.

மேற்கு மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் நிலவி வரும் கடுமையான தண்ணீர் பஞ்சத்தைக் கருத்தில் கொள்ளாமல் 40 டி எம் சி நீரை சில தனியார் திட்டங்களுக்குத் தாரை வார்ப்பது அப்பகுதி மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான வழிகளை அடைப்பது போலாகும் என்றும் அவர் கூறினார்.