துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது பழிபோடுவதையே புதுவை முதல்வர் நாராயணசாமி வாடிக்கையாக வைத்துள்ளதாக, என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

காமராஜ்நகர் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனை ஆதரித்து ரெயின்போ நகரில் இன்று ரங்கசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ரெயின்போ நகர் 9வது குறுக்குத் தெருவில் தொடங்கி வீடு, வீடாக ரங்கசாமி சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, அதிமுக மாநில செயலாளர் புருஷோத்தமன், சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன், பாஜக யூனியன் பிரதேச தலைவர் சாமிநாதன் ஆகியோர் அவர் உடன் இருந்தனர்.

பிரச்சாரத்தின் போது பேசிய என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, “துணைநிலை ஆளுநருக்கான அதிகாரம் என்ன ? தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கான அதிகாரம் என்ன ? என்பது மத்திய அமைச்சராக இருந்த நாராயணசாமிக்கு நன்றாகவே தெரியும். தங்களின் இயலாமையை, செயல்படாத தன்மையை துணைநிலை ஆளுநர் மீதும், எதிர்கட்சியினர் மீதும் பழியாக சொல்கிறார். இதற்கு துணைநிலை ஆளுநரை ஒரு கருவியாக நாராயணசாமி பயன்படுத்துகிறார். நாள்தோறும் கிரன்பேடி மீது குற்றம்சாட்டினால் அதை மக்கள் எப்படி ஒத்துக் கொள்வார்கள் ?

2015ம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்ட போது இத்தொகுதியை நான் பார்வையிடவில்லை என வைத்திலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார். எப்போது வெள்ள சேதம் ஏற்பட்டாலும், அனைத்து பகுதிகளிலும் நான் சென்று பார்வையிடுவது வழக்கம். 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போதும் நான் இத்தொகுதியை பார்வையிட்டேன்” என்று தெரிவித்தார்.