வாஷிங்டன்

ப்கானில் இருந்து அமெரிக்கப்படைகளைத் திரும்பப் பெறும் முடிவில் மாற்றம் இல்லை என அதிபர்  ஜோ பைடன் கூறி உள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் அரசுக்கும் தாலிபான்களுக்கும் இடையே கடும் போர் நடந்து வந்தது.  பல வருடங்களாக அமெரிக்கப் படைகள் ஆப்கானில் முகாம் இட்டு தாலிபான்களுக்கு எதிராகப் போரிட்டு வந்தனர்.  சமீபத்தில் ஜோ பைடன் அதிபராகப் பதவி ஏற்ற பிறகு அவர் அமெரிக்கப் படைகளை படிப்படியாக விலக்கத் தொடங்கினார்.

இதையொட்டி தாலிபான்கள் தீவிர தாக்குதல் நடத்தி ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள முக்கிய நகரங்களைக் கைப்பற்றினர்.  தலைநகர் காபூலை நேற்று கைப்பற்றியதும் ஆப்கான் அதிபர் அஷ்ரஃப் கனி நாட்டை விட்டு வெளியேறினார்.  அத்துடன் துணை அதிபரும் வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   தாம் நாட்டை விட்டு வெளியேறியது குறித்து முகநூலில் அஷ்ரஃப் கனி விளக்கம் அளித்தார்.

வெள்ளை மாளிகையில் இது குறித்துப் பேட்டியளித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ” ஆப்கானை கட்டமைப்பது அமெரிக்காவின் குறிக்கோள் அல்ல. அமெரிக்க ராணுவம் பயங்கரவாதத்தை ஒழிக்க அங்குச் சென்றது. அமெரிக்கா தனது நோக்கம் நிறைவேறி விட்டதால் ராணுவத்தை அங்கிருந்து வெளியேற்றியது.  அமெரிக்கா தாலிபான்களை ஒடுக்க ஆப்கான் ராணுவத்திற்கு அனைத்து வகையிலும் உதவியது.  ஆனால் தாலிபான்களுக்கு எதிராக போராடாமலே ஆப்கானிஸ்தான் ராணுவம் முழுமையாகச் சரணடைந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் ராணுவமே போராடத் தயாராக இல்லாத நிலையில் அமெரிக்க வீரர்கள் போரில் உயிர் இழப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆப்கானிஸ்தான் தலைவர்களின் ஒற்றுமையின்மையே தாலிபான்களின் வெற்றிக்குக் காரணம் ஆகும். ஆப்கானின் தற்போதைய நிலவரத்தை நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறும் முடிவில் உறுதியாக உள்ளேன். ஆப்கான் மக்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் ” எனத் தெரிவித்துள்ளார்.