சென்னை: தினகரனின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டுவந்த கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு, மற்றொரு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு தொடர்பாக முதல்வர் எடப்பாடியிடம் உத்தரவாதம் வாங்கியுள்ளாராம்.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பிரபு, தினகரனின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். அமமுக தகவல் தொழில்நுட்ப அணியிலும் பொறுப்பு வகித்தார். இந்நிலையில், மீண்டும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்தார்.

அப்போது, விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளராகவும், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும் குமரகுருவால் தனக்கு ஏகப்பட்ட தொல்லைகள் மற்றும் சிக்கல்கள் ஏற்படுவதாகவும், இதனைத் தீர்த்துவைக்க அமைச்சர் சி.வி.சண்முகமும் முயற்சிக்கவில்லை என்றும் புகாரளித்து, குமரகுருவை நீங்கள் கண்டித்து வைத்தால், அதிமுகவில் தொடர்வதில் எனக்கு எந்த சிக்கலும் இல்லை என்று தெரிவித்தாராம்.

மேலும், குமரகுருவால்தான் தான் தினகரன் பக்கம் சென்றதாகவும் கூறினாராம் பிரபு. இவர் முன்னாள் அமைச்சர் மோகனின் ஏற்பாட்டின்பேரில் முதல்வர் எடப்பாடியை சந்தித்தார். மேலும், கள்ளக்குறிச்சி தனிமாவட்டத்தை விரைவில் நிர்வாக ரீதியாக நடைமுறைக்கு கொண்டுவர வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார் பிரபு.

இந்நிலையில், குமரகுரு தொடர்பாக முதல்வர் சில உத்தரவாதங்களை அளித்ததாகவும், இதனால் பிரபு திருப்தியுடனும் மகிழ்ச்சியுடனும் திரும்பச் சென்றதாகவும் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.