பால்விலை குறைப்பு, கொரோனா நிவாரணம் உள்பட முதல்வர் பொறுப்பேற்றதும் மு.க.ஸ்டாலின் போட்ட முத்தான 5 கையெழுத்துக்கள்…

Must read

சென்னை:  தமிழக முதல்வராக பதவி ஏற்ற மு.க.ஸ்டாலின் இன்று மதியம் சென்னை தலைமைச் செயலகம் வந்து முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து, ஏற்கனவே அறிவித்தபடி, அதிரடியாக 5 கோப்புகளில் கையெழுத்திட்டு அசத்தி உள்ளார்.

தமிழகத்தின் புதிய முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடந்த எளிய நிகழ்வில், ‘முத்துவேல் கருணாநிதி எனும் நான்’ என்று ஸ்டாலின் பதவியேற்க, அவரைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றனர். அதைத்தொடர்ந்து கருணாநிதி, அண்ணா, பெரியார் மற்றும் அன்பழகன் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்திய ஸ்டாலின் மதியம் 12 மணிக்கு மேல் தலைமைச் செயலகம் வந்தார். அவருக்கு  காவல்துறையினர் மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை  ஏற்றுக்கொண்ட முதல்வர், தலைமைச்செயலகத்தில் உள்ள முதல்வரின் அறைக்கு வந்து,  தமிழக முதல்வருக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

அதையடுத்து, அவர் முக்கிய 5 அறிவிப்புகளை வெளியிட்டு, அதற்கான கோப்புகளில் கையெத்திட்டுள்ளார். அதன்படி,

1. முதல் அரசாணையாக கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டை ஒன்றுக்கு கருணாநிதி பிறந்த நாளில் ரூ.4000 என அறிவிக்கப்பட்டிருந்தது. அதை முதல் தவணையாக மே மாதத்திலேயே ரூ.2000-ஐ குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் அரசாணை. இதன்படி 2 கோடியே, 7 லட்சத்து 66,000 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர்.

2. ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படுகிறது. அது இந்த மாதம் 16ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

3. மகளிர், பணிக்குச் செல்லும் பெண்கள், படிக்கும் பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யும் திட்டம் நாளை முதல் அமல்.

4. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்கிற திட்டத்தின் கீழ் தேர்தல் பிரச்சாரத்தின்போது பெறப்பட்ட மனுக்களை 100 நாட்களில் தீர்வு காண உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்கிற திட்டத்தின் கீழ் துறை உருவாக்கப்படுகிறது. இதற்காக ஐஏஎஸ் அந்தஸ்து அதிகாரி நியமிக்கப்படுகிறார்.

5. கொரோனா சிகிச்சை பெறுவோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை செலவுகளை அரசே வழங்கும்.

More articles

Latest article