குஜராத்தைச் சேர்ந்த பால் பொருள் தயாரிப்பு நிறுவனமான அமுல் தற்போது தமிழ்நாட்டில் பால் கொள்முதலில் தீவிரமாக இறங்கியுள்ளது.

ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் செய்யும் பகுதிகளில் அதற்கு போட்டியாக அமுல் நிறுவனம் இறங்கியுள்ள நிலையில் இதனை தமிழக அரசு கண்டித்துள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பால் குளிரூட்டு நிலையம் ஒன்றை நிறுவியுள்ள அமுல் நிறுவனம் கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, தருமபுரி, திருப்பத்தூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள சுய உதவிக் குழுக்கள் மூலம் பால் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசுக்கு தகவல் வந்துள்ளது.

அமுல் நிறுவனத்தின் இந்த செயல் பால் கொள்முதல் செய்வதில் கூட்டுறவு சங்கங்களிடையே போட்டியை உருவாக்கும் என்றும் இதனால் மாநில மக்களின் நலனுக்காக இயங்கி வரும் ஆவின் நிறுவனம் தொழில் போட்டியை சந்திப்பதுடன் கொள்முதல் விலை உயர்வையும் விற்பனை விலையையும் ஏற்ற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படும். இது தமிழ்நாட்டு மக்களை வெகுவாக பாதிக்கும்.

என்று முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.