புதுடெல்லி :

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும் நாடு முழுவதும் இருந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு புலம்பெயர்ந்ததோடு பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர்.

2011-12-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி நாடுமுழுவதும் சுமார் 5 கோடி கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளதாகவும் அமைப்புசாரா தொழிலாளர்களில் கட்டிட மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களே பெருமளவில் உள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

கட்டிட மற்றும் கட்டுமானத் தொழிலாளர் சட்டம் 1996 ம் ஆண்டு இயற்றப்பட்டு, இவர்கள் நலன் கருதி தொழிலாளர் நல வரி (Cess) வசூலிக்கப்பட்டு வந்தது, இதில் 2020 மே மாதம் வரை சுமார் ரூ. 61,000 கோடி வசூலிக்கப்பட்டதாகவும் செலவினங்கள் போக தற்போது இதில் ரூ. 38000 கோடி நிதி உள்ளதாகவும் தமிழகத்தில் சுமார் ரூ. 3000 கோடி நிதி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர் நலனுக்காக கொரோனா வைரஸ் காலத்தில் இந்த நிதியில் இருந்து சுமார் ரூ. 4900 கோடி செலவு செய்யப்பட்ட நிலையில், தற்போது மீதம் இருக்கும் நிதியை மாநில கட்டிட மற்றும் கட்டுமானத் தொழிலாளர் நல வாரியங்கள் மூலமாக செலவு செய்ய பயன்முறை நோக்க திட்டம் (எம்.எம்.பி) (Mission Mode Project – MMP) என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.

நாட்டில் மொத்தமுள்ள 50 கோடி தொழிலாளர்களில் சுமார் 10 சதவீதம் பேர் கட்டுமானத் துறையில் இருந்தாலும், இந்த 5 கோடி பேரில் 30 சதவீத தொழிலாளர்கள் மட்டுமே நல வாரியங்களில் பதிவு செய்துள்ளனர் அவர்களில் 2.57 கோடி தொழிலாளர்கள் மட்டுமே தங்கள் பதிவை புதுப்பித்துள்ளனர். மேலும், இவர்களில் 1.8 கோடி பேருக்கே வங்கி கணக்கு மற்றும் ஆதார் போன்ற தரவு விவரங்கள் உள்ளன, தமிழகத்தில் 12.13 லட்சம் தொழிலாளர்கள் தங்களை நல வாரியங்களில் பதிவு செய்துள்ளனர்.

எம்.எம்.பி திட்டத்தின் மூலம், பதிவு செய்யாமல் உள்ள சுமார் 1.5 கோடி தொழிலாளர்களை பதிவு செய்ய மற்றும் பதிவு செய்த தொழிலாளர்களை புதுப்பிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது இதன் நோக்கமாகும்.

அமைப்புசாரா தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு சட்டம் 2008 ன் கீழ் செயல்படுத்தப்படும் மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்டங்களில் தொழிலாளர்களை இணைக்கவும், அவர்களுக்கான சந்தா, பங்களிப்புத் தொகை மற்றும் காப்பீட்டு சந்தா ஆகியவற்றை தொழிலாளர் நல வரி நிதியில் இருந்து மாநில அரசுகள் செலவு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

வீட்டுவசதி மற்றும் கூட்டுறவு, பயணவழி தங்குமிடம், விடுதிகள், மருந்தகங்கள், குழந்தைகள் காப்பகம், சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான பிரீமியங்களை செலுத்துதல், நடமாடும் மருந்தகங்கள், மானிய விலை உணவகங்கள், நூலகம், திறன் மையங்கள், சேவை மையங்கள், கட்டணமில்லா ஹெல்ப்லைன்கள், பயிற்சி , ஆலோசனை, போதை மறுவாழ்வு மையங்கள், போக்குவரத்து, முக்கிய புனித ஸ்தலங்களில் தங்குமிட வசதிகள், சுற்றுலா மையங்கள் மற்றும் அதிநவீன கட்டுமான தளங்களுக்கு கற்றல் பயணம், வெளியுலக அனுபவங்களை தெரிந்துகொள்வது போன்ற திட்டங்களை செயல்படுத்த ஊக்கமளிப்பதுடன் அதற்கான நடவடிக்கைகளை மாநில நல வாரியங்கள் மேற்கொள்ளவேண்டும்.

கொரோனா கால நேரடி பணப் பலனை வங்கி கணக்கு மற்றும் ஆதார் விவரங்களை பதிவு செய்திருந்த தொழிலாளர்கள் மட்டுமே பெறமுடிந்த நிலையில், எம்.எம்.பி திட்டத்தில் தொழிலாளர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில், நாட்டில் மொத்தமுள்ள 5 கோடி தொழிலாளர்களையும் நல வாரியங்களில் பதிவு செய்யத் தேவையான விழிப்புணர்வு பிரச்சாரங்களை மாநில நல வாரியங்கள் தொடர்ந்து செய்யவேண்டும் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் நிலையை கருத்தில் கொண்டு நல வாரிய பதிவுகளை புதுப்பிக்க இவர்கள் நேரடியாக வரவேண்டும் என்ற விதியைத் தளர்த்தி, வீடியோ மற்றும் தொலைபேசி அழைப்புகள் போன்ற மாற்று வழிகள் மூலம் பதிவுகளை புதுப்பிக்க வரும் அக்டோபர் மாதத்திற்குள் தேவையான ஏற்பாடுகளை மாநில நல வாரியங்கள் மேற்கொள்ளவேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.