டெல்லி:  பிரதமர் மோடிக்கு ஆவணப்படம் வெளியிட்டு பிபிசி இந்தியாவுக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

இந்தியாவில் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அமெரிக்காவை சேர்ந்த பிபிசி நிறுவனம், 20ஆண்டுகளுக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கோத்ரா ரெயில் சம்பவம் தொடர்பாக, தற்போதைய பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டி ஆவணப்படம் தயாரித்து வெளியிட்டு உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு கரம் நீட்டி உள்ளனர். ஆனால், பாஜக உள்பட இந்திய ஆர்வலர்கள், பிபிசியின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பிபிசியின் நடவடிக்கை திட்டமிட்ட செயல் என்றும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

இந்த ஆவணப்படம் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்திற்காக உருவாக்கப்பட்டதாகவும், காலனி ஆதிக்க மனப்பான்மையை காட்டுவதாகவும் பிபிசி ஆவணப்படத்திற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. தொடர்ந்து இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிடவும் மத்திய அரசு கடந்த மாதம் 21-ம் தேதி தடை விதித்தது.  இந்தியாவில் சமூகவலைதளங்கள் மூலம் பகிர்வதை தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூகவலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால், இங்கிலாந்து உள்பட பல்வேறு வெளிநாடுகளில் பிபிசி இந்த ஆவணப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் இந்தியாவில் தடையை மீறி பல அமைப்புகள் இந்த ஆவணப்படத்தை சட்டவிரோதமாக வெளியிட்டு வருகின்றன. டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம், டெல்லி அம்பேத்கார் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பல்கலைக்கழங்களில் தடையை மீறி பிரதமர் மோடி குறித்த பிபிசியின் ஆவணப்படம் வெளியிடப்பட்டது.

இதையடுத்து,  பிரதமர் மோடி குறித்து ஆவணப்படம் எடுத்த இங்கிலாந்தின் பிபிசி செய்தி நிறுவனம் இந்தியாவில் செயல்பட தடை செய்ய வேண்டுமெனவும், இந்த ஆவணப்படத்திற்கு பின்னால் சதி உள்ளதா? என கண்டறிய என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென இந்து சேனா என்ற அமைப்பின் தலைவர் விஷ்ணு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்தியாவில் பிபிசி செய்தி நிறுவனத்திற்கு தடை விதிக்கவேண்டுமென தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது. ஒரு ஆவணப்படம்  நாட்டை எப்படி பாதிக்கும்? என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா, இந்த  மனு விசாரணைக்கு உகந்தததல்ல என்று கூறிதள்ளுபடி செய்தார்.