சென்னை: கொரோனா தொடர்பாக வதந்திகளை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.  கொரோனா பரவலை கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இந் நிலையில், இந்த குழுவில் உள்ள அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார், எம்.ஆர். விஜயபாஸ்கர், அன்பழகன், காமராஜ் குழுவில் கூடுதலாக சேர்க்கப்பட்ட அமைச்சர் மாபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் இன்று ஆலோசனை நடத்தினர்.

பின்னர் அமைச்சர்கள் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தனர். முதலில் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: சென்னையில் 16%  தெருக்களில் கொரோனா தொற்று இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனாவை தடுப்பதில் பொதுமக்கள் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். தமிழக அரசு மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் நிச்சயம் வெற்றி கொள்வோம் என்றார்.

பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: கொரோனா தொடர்பாக வதந்திகளை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும சென்னையில் படுக்கை வசதி பற்றாக்குறை என தவறான தகவலை மக்களுக்கு அளித்த செய்தி வாசிப்பாளர் வரதராஜன் மீது பேரிடர் விதியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை என்று அவர் கூறியது தவறானது. அரசை பாராட்டவில்லை என்றாலும், குற்றச்சாட்டை சொல்வதற்கு முன்பு யோசிக்க வேண்டும். கண்ணுக்குத் தெரியாத வைரசை எதிர்த்து அனைவரும் போராடும் நிலையில் விமர்சனங்கள் வேண்டாம்.

தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் போதிய படுக்கைகள் உள்ளன. சென்னையில் மட்டும் அரசு மருத்துவமனைகளில் 5,000 படுக்கைகள் இருக்கின்றன. கூடுதல் படுக்கைகள் ஏற்படுத்தும் விதமாக முதற்கட்டமாக 30 மருத்துவமனைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

முகக் கவசம் அணிவதுடன்,சமூக விலகலை கடைபிடித்தாலே கொரோனா பரவாமல் தடுக்க முடியும். தூங்காமல் மருத்துவர்கள், செவிலியர்கள் அயராமல் பணியாற்றுகின்றனர் என்றார்.