சென்னை: தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் இணைத்து தமிழ்த்தாய் படத்தை அண்ணாமலை வெளியிட்டுள்ளதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டமாக பதிலடி கொடுத்து டிவிட் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில், தமிழ்த்தாய் என  பல ஆண்டுகளாக அறியப்பட்ட அழகிய பெண்ணின் புகைப்படம் இன்று அரசியல்வாதிகளால் அசிங்கப்படுத்தப் பட்டு வருகிறது. அரசியல்வாதிகளின் அதிகார போதையால், இன்று தமிழ், தமிழ்த்தாய் போன்றவை விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்த இசையமைப்பாளர் ஏர்.ஆர்.ரகுமான், தமிழ்த்தாய் என்ற படத்திற்கு பதிலாக, தலைவிரிகோலமான  தமிழணங்கு என்ற ஒரு படத்தை பதிவிட்டார். இது, தமிழ்ததாயை இழிவுபடுத்தும் வகையில் அமைந்தது. தமிழ், தமிழன் என்று பெருமையாக கூறுபவர்கள், தமிழ்த்தாயின் புகைப்படத்தை கண்டு கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், மனோ தங்கராஜின்  தமிழ்த்தாய் வீடியோவுடன், ஓவியர் சந்தோஷ் நாராயணன் வரைந்த தமிழணங்கு ஓவியத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்து, ‘எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே’ என அவர் பெருமிதம் தெரிவித்திருந்தார். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் தனது டிவிட்டர் பதிவில், ‘எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே’ என்று பதிவிட்டார். அத்துடன், அவர் புதிதாக வேறொரு தமிழ்த்தாய் ஓவியத்தையும் பதிவிட்டிருந்தார்.

இந்த ஓவியங்களில் எந்த ஓவியம் தமிழ்த்தாய் ஓவியம்? என்று சமூக வலைதளங்களில் சர்ச்சை பதிவுகள் பதிவிடப்பட்டு வருகின்றன. தலைவிரிக்கோலத்துடன் தமிழன்னை இருப்பதாகவும், அதுமட்டுமல்லாமல் கறுப்பு நிறத்துடன் இருப்பதாகவும் பாஜகவினர் விமர்சித்தனர். அப்போது, தமிழ் கறுப்புதான், தமிழர் கறுப்பு தான், தமிழன்னையும் கறுப்புதான் என பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதுபோல,  பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பகிர்ந்திருந்த தமிழ்த் தாயுக்கும் வரவேற்பும் விமர்சனமும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு அண்ணாமலை வெளியிட்டுள்ள தமிழ்த்தாய் படத்தில், என்ற எழுத்து இடம்பெற்றுள்ளதை கண்டுபிடித்து விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,

தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில், தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது. இதைத்தான் ‘தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்”என வள்ளுவர் அடையாளம் காட்டிப் போனார் என்று கூறியுள்ளார்.

தமிழக அரசியல்வாதிகளுக்கும், கட்சியினருக்கும் இன்று தமிழ், தமிழன், தமிழர்களின் நிலை, வெறும் வாக்கு வங்கியாகவே தெரிகிறது என்பது உறுதிபடுத்தப்பட்டு வருகிறது.