சென்னை

ந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சிதம்பரம் நடராஜர் கோவிலைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க உள்ளதாக அமைச்சர் சேகர் பாபு கூறி உள்ளார்

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் அதிகாரத்தின் கீழ் இயங்கி வருகிறது.   இந்தக் கோவிலில் தீட்சிதர்கள் மிகவும் அநியாயம் செய்வதாகப் பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. நேற்று முன் தினம் சிதம்பரம் கோவிலில் தேர்த்திருவிழா சமயத்தில் தீட்சிதர்கள் கனகசபையில் கடவுளைத் தரிசிக்கக் கூடாது என பதாகை வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த பதாகையை அரசு அதிகாரிகள் அகற்றிய போது தீட்சிதர்கள் அதைத் தடுத்து கடும் வாக்குவாதம் செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  இதையொட்டி தீட்சிதர்கள் மீதான புகார்கள் மேலும் வலுப்பெற்று உள்ளன.  இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் அமைச்சர்,

”தீட்சிதர்கள் தங்களுடைய சொந்த நிறுவனம் போல  சிதம்பரம் நடராஜர் கோவிலை நினைத்து செயல்படுகின்றனர்.  கோவிலை இந்து சமய அறநிலையத்துறை நடத்த் வேண்டும் என ஒட்டு மொத்த பக்தர்களும் பொதுமக்களும் நினைக்கின்றனர்.

எனவே அவர்கள் எண்ணப்படி சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுக்க அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.  முதலில் இதற்கான அனைத்து ஆதாரங்களும் திரட்டப்பட்டு வருகிறது.”

என அறிவித்துள்ளார்.