சாகர்:

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இதில் பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராமப்புற அமைச்சராக இருப்பவர் கோபால் பார்கவா. இவரது சொந்த ஊர் சாகர் மாவட்டத்தில் உள்ள கர்ககோட்டா என்ற கிராமமாகும். அக்ஷய திருதியை முன்னிட்டு 700 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார்.

அப்போது மணப்பெண்களுக்கு மரக் கட்டைகளைப் பரிசாக அவர் வழங்கினார். திருமணத்தில் கலந்து கொண்ட பலருக்கும் இது குழப்பத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘கணவன் குடிகாரனாக மாறாமல் இருப்பதற்காக மரக்கட்டையை வழங்கினேன். மது குடிக்காதே என்று சொல்லியும் மீறி குடித்தால் அவரை மனைவி அடித்து திருத்தவே வழங்கினேன்.

பெண்கள் குடிகார கணவனால் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அவர்கள் வேலை செய்து வாங்கும் சொற்ப சம்பளத்தில் குடித்துவிடுவதாகவும், தட்டிக்கேட்டால் அடித்து சித்ரவதை செய்வதாகவும் பெண்கள் கூறுகின்றனர்.

மது அச்சுறுத்தலில் இருந்து குடும்பங்களைக் காப்பாற்ற இது ஒரு முயற்சியாகும். அரசோ அல்லது போலீசோ தனியாக மாற்றத்தைக் கொண்டு வரமுடியாது. பொதுமக்கள் தான் மாற்றத்தைக் கொண்டு வர முன்வர வேண்டும்’’ என்றார்.